TVK : 'ஆகஸ்ட்டில் பிரமாண்ட மாநாடு; விஜய்தான் முதல்வர் வேட்பாளர்!' - தவெகவின் முக்கிய தீர்மானங்கள்!
தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழுக் கூட்டம் அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் பனையூரில் நடந்திருந்தது. இதில் சில முக்கியமான தீர்மானங்களை தவெக நிறைவேற்றியிருக்கிறது. குறிப்பாக, 2026 தேர்தலை தவெக தலைமையிலான கூட்டணியை கொண்டே எதிர்கொள்ளப் போவதாகவும் அறிவித்திருக்கின்றனர்.
செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள், 'ஜூலை மாதத்திலிருந்து 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் வகையில் உறுப்பினர் சேர்க்கையை வேகப்படுத்துவது. ஆகஸ்ட்டில் இரண்டாவது மாநில மாநாடு. 5 மண்டலம், 120 மாவட்டங்கள் ,12500 கிளைகழகங்களில் கட்சியின் கொள்கை விளக்க கூட்டத்தை நடத்த வேண்டும்.
2026 இல் தலைவர் விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக கொண்டு எதிர்கொள்ள வேண்டும். திருச்சியில் மணற்கொள்ளையை தடுக்க தவறிய திமுக அரசுக்கு கண்டனம். நெய்வேலி சுரங்கத்துக்கு நிலம் கொடுத்த மக்களுக்கு உரிய இழப்பீடும் வேலைவாய்ப்பும் வழங்க வேண்டும். தூத்துக்குடி, கன்னியாகுமரியில் கனிமவளக் கொள்ளைகளை தடுக்க வேண்டும்.

திண்டுக்கல்லில் வாசனை திரவிய தொழிற்சாலை அமைக்க வேண்டும். ஜாக்டோ ஜியோ போராட்டத்துக்கு ஆதரவு. தமிழக மீனவர்களின் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு வேண்டும். கச்சத்தீவை குத்தகையின் அடிப்படையில் பெற வேண்டும். இருமொழிகொள்கையை உறுதியாக பின்பற்றுகிறோம். ஆங்கிலம் பேசுவது அவமானம் என சொல்லும் அமித்ஷாவின் ஒன்றிய அரசின் சூழ்ச்சியை முறியடிப்போம்.'
விஜய் யாருடன் கூட்டணி வைக்கப் போகிறார் என்பது பேசுபொருளாகியிருக்கும் சூழலில், 2026 தேர்தலில் விஜய்தான் முதல்வர் வேட்பாளர் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பது மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.