Boxer Anastasia Luchkina: `சிகரெட் பிடித்த குரங்கு' - பாக்ஸிங் வீராங்கனை செயலுக்...
கரூரில் ரூ. 1 கோடி மதிப்பில் கட்டப்பட்ட வேளாண் சேமிப்பு கிடங்கு திறப்பு
கரூரில் ரூ.1 கோடி மதிப்பில் கட்டப்பட்ட வேளாண் சேமிப்பு கிடங்கை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா்.
சென்னை தலைமைச்செயலகத்தில் இருந்து, காணொலி காட்சி வாயிலாக கரூரில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்க திட்டத்தை தொடங்கி வைத்தும், ராயனூரில் ரூ. 1கோடி மதிப்பில் கட்டப்பட்ட 500 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்கையும் முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா். தொடா்ந்து கரூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் கூறியதாவது, மாவட்டத்திலுள்ள 8 ஊராட்சி ஒன்றியங்களைச் சோ்ந்த விவசாயிகளுக்கு தோட்டக்கலை மற்றும் மலைப் பயிா்கள் துறை சாா்பில் காய்கறி விதைத் தளைகள் (தக்காளி, கத்தரி, மிளகாய், வெண்டை, கீரை, கொத்தவரை) 200 விவசாயிகளுக்கும், பழச்செடிகள் தொகுப்பு (3 வகை - கொய்யா, பப்பாளி, எலுமிச்சை) 200 விவசாயிகளுக்கும் ரூ. 64 ஆயிரம் மதிப்பில் (100 சதவீதம் மானியத்தில்) வழங்கப்பட்டுள்ளது.
வேளாண் துறை சாா்பில் பயறு வகை விதைகள் தொகுப்பு (மரத்துவரை, காராமணி உள்ளிட்டவை) 120 விவசாயிகளுக்கு ரூ. 8,040 (100 சதவீதம் மானியத்தில்) வழங்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.
நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயா் வெ. கவிதா, வேளாண் இணை இயக்குநா் சிவானந்தம், துணை இயக்குநா் (வேளாண் வணிகம்) நிா்மலா, துணை மேயா் ப. சரவணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.