TVK: 'பனையூரில் விஜய்; ஆஜரான நிர்வாகிகள்; மா.செ-க்களுடன் பெர்சனல் மீட்டிங்'- விஜய்யின் திட்டம் என்ன?
பனையூரில் உள்ள தவெகவின் தலைமையகத்தில் நிர்வாகிகளுடன் முக்கிய மீட்டிங்கை நடத்தி வருகிறார் அக்கட்சியின் தலைவர் விஜய். மாவட்டச் செயலாளர்களின் அறிவிப்பு சம்பந்தமான இந்த மீட்டிங் குறித்து ஸ்பாட்டிலிருந்து கிடைத்த தகவல்கள் இங்கே.
கட்சிக்கென புதிய நிர்வாகிகளை நியமிக்கும் வேலைகள் கடந்த சில மாதங்களாகவே நடந்துகொண்டிருந்தது. இறுதியாக, கடந்த ஜனவரி 10 ஆம் தேதி பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமையில் தமிழகம் முழுவதையும் சேர்ந்த நிர்வாகிகளுடன் ஒரு நீண்ட கூட்டம் நடந்திருந்தது. அந்தக் கூட்டத்தின் முடிவில் மாவட்டச் செயலாளர்களும் மாவட்டத்தின் முக்கிய நிர்வாகிகளும் தேர்ந்தெடுக்கப்பட்டு விஜய்யிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.
பிப்ரவரி 2 ஆம் தேதி கட்சி தொடங்கி முதலாமாண்டு நிறைவடையவிருக்கிறது. இந்நிலையில், அதற்குள் தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளை தனித்தனியாக மாவட்ட வாரியாக சந்தித்து ஆலோசனை வழங்க விஜய் திட்டமிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்துதான் நேற்று இரவு திடீரென சில மாவட்ட நிர்வாகிகளுக்கு தலைவருடன் மீட்டிங் இருக்கிறது என திடீரென தகவல் சொல்லப்பட்டிருக்கிறது. இரவு 12 மணிக்கெல்லாம் சில மாவட்டங்களுக்கு தகவல் சொல்லப்பட்டு அதன்பிறகு அவர்கள் கிளம்பி வந்திருக்கிறார்கள். தொலைதூரத்திலிருந்து வரும் நிர்வாகிகள் வந்து சேர வேண்டும் என்பதற்காக அலுவலகத்துக்கு விஜய்யின் வருகையும் 12:30 மணிக்கு மேல் திட்டமிடப்பட்டிருக்கிறது.
காலை 8:30 மணி முதலே நிர்வாகிகள் பனையூர் அலுவலகத்துக்கு ஆஜர் ஆக ஆரம்பித்தனர். சென்னை, கடலூர், புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கோயம்புத்தூர், சேலம், அரியலூர், தஞ்சாவூர், ராணிப்பேட்டை, திண்டுக்கல், திருநெல்வேலி என குறிப்பிட்ட 20 மாவட்டங்களிலிருந்து மட்டுமே நிர்வாகிகள் வரவழைக்கப்பட்டிருந்தனர். ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் மாவட்டச் செயலாளர், துணைச் செயலாளர், இணைச் செயலாளர், பொருளாளர், செயற்குழு உறுப்பினர்கள் என கிட்டத்தட்ட 15 பேர் வந்திருந்தனர்.
மாவட்டச் செயலாளர் உட்பட முக்கிய பதவிகளுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் நிர்வாகிகளின் முழு விவரமும் அடங்கிய பைல்கள் விஜய்யிடம் ஒப்படைப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது
தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் நிர்வாகிகளும் அந்ததந்த பதவிகளுக்கென்று நிர்ணயிக்கப்பட்டிருக்கும் கட்சி வளர்ச்சி நிதிக்கான டிடியோடு வந்திருந்தனர்.
இதுசம்பந்தமாக நிர்வாகிகளிடம் விசாரிக்கையில், 'மக்கள் இயக்கம் சார்ந்து நீண்ட காலமாக உழைத்துக் கொண்டிருக்கும் நிர்வாகிகள் மட்டுமே முதற்கட்டமாக வரவழைக்கப்பட்டிருக்கின்றனர். முதலில் இவர்களை சந்தித்து தலைவர் உரையாடி ஆலோசனை வழங்கவிருக்கிறார். மேலும், முதற்கட்டமாக இங்கு வரவழைக்கப்பட்டிருக்கும் நிர்வாகிகளின் பொறுப்பையும் தலைவர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்ககூடும்.' என்றனர்.
12:30 வரைக்குமே நிர்வாகிகள் கட்சி அலுவலகத்தை நோக்கி வந்தவாறே இருந்தனர். நிர்வாகிகளை ஒழுங்குப்படுத்தி ஏற்கனவே கையிலிருக்கும் பட்டியல்படி ஆனந்த் தலைமையிலான குழு ஒழுங்கு செய்து அமர வைத்துவிட்டு விஜய்க்கு செய்தி சொல்லப்பட்டது. சரியாக 12: 45 மணிக்கு விஜய் பனையூர் அலுவலகம் வந்து சேர்ந்து நிர்வாகிகள் கூட்டத்தை தொடங்கினார்.
கட்சிரீதியாக கிட்டத்தட்ட 100 மாவட்டங்களை பிரிக்க தவெக சார்பில் திட்டமிட்டிருக்கிறார்கள். மூன்று நான்கு கட்டமாக ஒவ்வொரு மாவட்ட நிர்வாகிகளாக தனித்தனியாக சந்தித்துப் பேசும் முடிவில் விஜய் இருக்கிறார். இன்றைய கூட்டம் முடிந்தவுடன் முதற்கட்ட மாவட்டச் செயலாளர்கள் பட்டியல் வெளியாகும் என தகவல் சொல்கிறார்கள் சிலர்.!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs