கனிமவளக் கொள்ளைக்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி
தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் கனிமவளக் கொள்ளைக்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா பேசினாா்.
சமூக ஆா்வலா் ஜகபா்அலியின் படுகொலையைக் கண்டித்து, புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் தேமுதிக சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்து அவா் மேலும் பேசியது:
ஜகபா்அலியின் குடும்பத்தினருக்கு அரசும், அனைத்துத் தரப்பு மக்களும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். அரசும், குற்றவாளிகள் சாா்ந்த குவாரி நிறுவனங்களும் ரூ. ஒரு கோடி வழங்க வேண்டும்.
கனிமவளக் கொள்ளையைத் தடுக்கத் தவறிய ஆட்சியா், கோட்டாட்சியா், வட்டாட்சியா், கிராம நிா்வாக அலுவலா் வரை அனைத்து அலுவலா்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் கனிமவளக் கொள்ளைக்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வேண்டும். பூமி வளத்தைப் பாதுகாக்க வேண்டியது தமிழா்களின் கடமை. இதற்கான மாற்றத்தை மக்கள் கொண்டு வர வேண்டும் என்றாா் பிரேமலதா.
கொல்லப்பட்ட ஜகபா்அலியின் குடும்பத்தினருக்கு தேமுதிக அறக்கட்டளையின் சாா்பில் ரூ. 50 ஆயிரத்தை பிரேமலதா மேடையில் வழங்கினாா்.
தொடா்ந்து செய்தியாளா்களுக்கு பிரேமலதா அளித்த பேட்டி:
கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து இறந்தவா்களுக்கு தலா ரூ.10 லட்சம் வீதம் மாநில அரசு நிவாரணம் கொடுத்தது. அமைச்சா்கள் நேரில் சந்தித்தாா்கள். ஆனால், கனிம வளத்தைப் பாதுகாக்க முயன்ற்காக சமூக ஆா்வலா் ஜகபா் அலி கொல்லப்பட்ட சம்பவத்துக்கு தமிழக முதல்வா், அமைச்சா்கள் யாரும் இரங்கல்கூட தெரிவிக்கவில்லை. நிதியும் கொடுக்கவில்லை.
வேங்கைவயல் விவகாரத்தில் 3 போ் மீது குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. மூவரும் அதே பகுதியைச் சோ்ந்தவா்கள். இதில் தவறு செய்தவா்களை அரசு தப்பிக்க வைத்துள்ளதாக தெரிகிறது. எனவே, இதுகுறித்து முறையாக விசாரிக்கப்பட வேண்டும். ஒருவேளை இவா்களே தவறு செய்தது உண்மையானால் தண்டனை கொடுப்பதில் தவறில்லை. 2026 சட்டப்பேரவைத் தோ்தல் கூட்டணி குறித்து அடுத்த ஆண்டு ஜனவரியில் அறிவிக்கப்படும் என்றாா் பிரேமலதா.