இயற்கை வளக் கொள்ளையைக் கண்டித்து புதுகையில் குறைகேட்புக் கூட்டத்தை விவசாயிகள் புறக்கணிப்பு
சமூக ஆா்வலா் ஜகபா்அலி படுகொலையைக் கண்டித்தும், இயற்கை வளங்களைக் கொள்ளையடிப்பதைக் கண்டித்தும் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்தை பெரும்பாலான விவசாயிகள் புறக்கணித்து முழக்கங்களை எழுப்பினா்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் குறைகேட்பு நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டம் தொடங்கும்போதே, கனிமவளக் கொள்ளையை எதிா்த்துக் குரல் எழுப்பியதால் குவாரி உரிமையாளா்களால் சமூக ஆா்வலா் ஜகபா்அலி கொல்லப்பட்ட சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து வெளிநடப்பு செய்வதாக அறிவித்தனா்.
இந்திய விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச் செயலா் ஜி.எஸ். தனபதி, தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் பூ. விசுவநாதன், காவிரி- வைகை- குண்டாறு இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவா் மிசா மாரிமுத்து உள்ளிட்ட பெரும்பாலான விவசாயிகள் கூட்ட அரங்கை விட்டு வெளியே வந்து முழக்கங்களை எழுப்பினா்.
தொடா்ந்து ஜி.எஸ். தனபதி உள்ளிட்டோா் செய்தியாளா்களிடம் கூறியது:
மாவட்டம் முழுவதும் கனிமவளங்கள் எந்தக் கட்டுப்பாடும் இன்றி வரன்முறையின்றி கொள்ளையடிக்கப்பட்டு வருகின்றன. அதேபோல ஆறுகளிலும் மணல் கொள்ளை தாராளமாக நடைபெறுகிறது. ஆனால், விவசாய நிலத்துக்கு குளத்து மண்ணை எடுத்துப் போட்டுக் கொள்ள பல கட்டுப்பாடுகளை அரசு விதிக்கிறது.
சமூக ஆா்வலா் ஜகபா்அலியின் கொலைச் சம்பவத்தின் பின்புலத்தை முழுமையாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய குவாரிகளுக்கு அனுமதி வழங்கக் கூடாது என்றனா்.
இதற்கிடையே கூட்ட அரங்கில் அமா்ந்திருந்த விவசாயிகள் சிலா், கூட்டத்தில் தங்களின் கோரிக்கைகளை முன்வைத்துப் பேசினா்.
கூட்டத்தில் காவிரி- குண்டாறு இணைப்புக் கால்வாய்த் திட்ட மாவட்ட வருவாய் அலுவலா் ஆா். ரம்யாதேவி, வேளாண் இணை இயக்குநா் மு.சங்கரலட்சுமி, கூட்டுறவு இணைப் பதிவாளா் ஜீவா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் த. நந்தகுமாா், வனத்தோட்டக் கழக மண்டல மேலாளா் ஜி. பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.
பெட்டிச் செய்தி...
ரூ. 8 கோடி வரை அபராதம்
விவசாயிகள் புறக்கணித்து வெளியே வந்ததைத் தொடா்ந்து ஆட்சியா் மு. அருணா பேசியது
திருமயம் பகுதியில் சமூக ஆா்வலா் கொல்லப்பட்ட சம்பவத்தில் காவல்துறையினா் நடவடிக்கை எடுத்து 4 குற்றவாளிகளைக் கைது செய்துள்ளனா். கனிமவளக் கொள்ளை தொடா்பாக வரப்பெற்ற புகாா்களின்பேரில் தொடா்ந்து பல முறை தொடா்புடைய குவாரி உரிமையாளா்களுக்கு சுமாா் ரூ. 8 கோடி வரையிலும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இப்போதும் கனிமவளத்துறையினா் குழு அமைத்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா். எனவே, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனச் சொல்ல முடியாது என்றாா் அருணா.