தமிழ்நாட்டு மக்களை குடிக்கு அடிமையாக்கியது தான் திராவிட மாடல் சாதனை: அன்புமணி ...
US: ``விளையாட்டுப் போட்டிகளில் பெண்களுடன் திருநங்கைகள்.." - விமர்சனத்துக்குள்ளாகும் மசோதா!
அமெரிக்கா நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான விளையாட்டுப் போட்டிகளில் திருநங்கைகள் பங்கேற்பதை கட்டுப்படுத்தும் மசோதா நிறைவேற்றப்பட்டிருக்கிறது. குடியரசுக் கட்சி தலைமையிலான அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் கடந்த செவ்வாய் கிழமை நிறைவேற்றப்பட்ட இந்த மசோதாவில், "ஒரு நபரின் இனப்பெருக்க உயிரியல் மற்றும் பிறக்கும் போதுள்ள மரபியல் அடிப்படையிலே 'பாலினம்' வரையறுக்கப்படுகிறது. எனவே, பெண்கள் அல்லது சிறுமிகளுக்கான தடகள போட்டிகளில் திருநங்கைகள் பங்கேற்க தடை விதித்து கட்டுப்படுத்தப்படுகிறது.
மத்திய அரசின் நிதியுதவி பெறும் பள்ளிகள், பல்கலைக்கழகங்களிலும் பெண் அணிகளில் இணைந்து திருநங்கை மாணவர்கள் விளையாட இந்தச் சட்டத்தின் மூலம் தடை விதிக்கப்படுகிறது" எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த மசோதாவுக்கு இரண்டு ஜனநாயகக் கட்சியினர் உட்பட 218 வாக்குகள் கிடைத்திருக்கிறது. ஆனால், இந்த மசோதாவை செனட் ஏற்றுக்கொண்டு சட்டமாக இயற்றுவது சாத்தியமில்லை என்றத் தகவலும் கூறப்படுகிறது.
இதன் பின்னணியில் பல விவாதங்கள் நடந்து வருகிறது. `பெண்கள் பிரிவின் விளையாட்டுப் போட்டிகளில் பிறப்பில் ஆண்களான திருநங்கைகள் பங்கேற்பது சமத்துவ நிலைப்பாடல்ல. மாற்றுத்திறனாளி பெண்கள், பிற பெண்களை காட்டிலும், திருநங்கைகள் உடல்ரீதியாக பலமாக இருக்கலாம். அதனால் திருநங்கைகள் பெண்களுடன் இணைந்து போட்டிகளில் பங்கேற்கும் போது, பெண்களுக்கான திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் குறையும்' என குடியரசுக் கட்சியினர் வாதிடுகின்றனர்.
இதை விமர்சித்துள்ள ஜனநாயகக் கட்சியினர், திருநங்கைகளுக்கு எதிரான பாகுபாட்டை இந்த மசோதா அதிகரிக்கிறது. இந்தச் சட்டம் LGBTQ உரிமைகளை குறைத்து மதிப்பிடுகிறது' என எதிர்ப்பவர்கள் கருத்து தெரிவித்திருக்கின்றனர். உலகளாவிய விளையாட்டு நிர்வாக அமைப்புகளின் வழிகாட்டுதலோடு, நேஷனல் கோலிஜியேட் அத்லெட்டிக் அசோசியேஷன் (NCAA) தற்போது திருநங்கைகளுக்கான விதிகளை விளையாட்டின் அடிப்படையில் தீர்மானித்து வருவது குறிப்பிடத்தக்கது.