கோயில் திருவிழாவில் பக்தர்கள் கூடாரத்தை தாக்கிய யானைகள்! 3 பேர் பலி; 36 பேர் காய...
Valentine's Day: காதலைத் தூண்டும் இசை... பின்னால் இருக்கும் அறிவியல் காரணம் தெரியுமா?
"இசைக்கு மயங்காத உயிர்களை இல்லை" என்று சொல்லிக் கேள்விப்பட்டிருப்போம். நம் அன்றாட வாழ்வில் இணையத்தில் பார்க்கப்படும் காணொளிகளில் 20% இசை சம்பந்தமான காணொளிகள் உள்ளதாம்.
இசையால் ஒருவரை மகிழ்விக்கவும் முடியும்; அழ வைக்கவும் முடியும். அந்த அளவிற்கு இசை மனிதர்களைக் கட்டிப்போட்டு உள்ளது. தாலாட்டு தொடங்கி ஒப்பாரி வரை உணர்வுகளை வெளிப்படுத்த இசையைப் பயன்படுத்துகிறோம்.
இசைக்கும் காதலுக்கும் இடையேயான ஊடல் பற்றி அறிவியல் என்ன சொல்கிறது என்று தெரிந்து கொள்ளலாம்.
![love](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-11/y8tkirpu/hero-image-14.jpg)
இசை காதல் உறவுகளில் பிணைப்பை ஏற்படுத்த முக்கிய பங்கு வகிப்பதாக அறிவியல் கூறுகிறது. உறவுகளுக்கான பிணைப்பு இசையால் மேலும் வலுப்படுத்த முடியும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். இருவரின் ரசனைகள் வெவ்வேறாயினும் இசை அவர்களை ஒன்றிணைக்கும் என்கின்றனர்.
இசை - காதல் பிணைப்பிற்குப் பின்னால் இருக்கும் அறிவியல்
இசை ஆக்ஸிடாஸின் (காதல் ஹார்மோன்) வெளியீட்டைத் தூண்டுகிறது.
ஒரு துணையுடன் இசை கேட்கும் போது நம்பிக்கை, நெருக்கம், பிணைப்பு உணர்வுகளுடன் தொடர்புடைய ஹார்மோன் வெளியீட்டைத் தூண்டும்.
அதுமட்டுமில்லாமல் இசை நேர்மறை உணர்ச்சிகளை மனிதர்களுக்குத் தூண்டுமாம். இதனால் அந்த உறவுகளின் மீதான ஈர்ப்பும் விருப்பமும் மேலும் அதிகரிக்கச் செய்யுமாம்.
ஆராய்ச்சிகள் கூறுவதென்ன?
காதல் உணர்வுக்கும் இசைக்குமான தொடர்பு வெறும் கற்பனை கிடையாது. இந்த பிணைப்பு அறிவியல் பூர்வமாகப் பலமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது. 2010 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நிகோலஸ் க்யுகன் என்பவர் செய்த ஆராய்ச்சி ஒன்றில் காதல் பாடல் வரிகளை அதிகம் கேட்பவர்கள் எளிதில் காதல் வயப்படுவார்கள் என நிரூபித்துள்ளார்.
இந்த ஆராய்ச்சியை அவர் 18-29 வயது பெண்களை வைத்துச் செய்துள்ளார். சில பெண்களுக்குக் காதல் பாடல் வரிகளையும் சில பெண்களுக்குச் சாதாரண பாடல் வரிகளையும் கேட்க வைத்துள்ளார். அதன் பின்னர் அவர்களை ஆண்களோடு பேச வைத்தபோது காதல் பாடல் வரிகள் கேட்ட பெண்களுக்கு ஆண்கள் மீது ஒரு விதமான ஈர்ப்பு வருவதாகக் கூறியுள்ளனர்.
![இசை](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-13/3xoxylmo/hero-image-28.jpg)
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் டேவிட் க்ரீன்பேக், இசை கேட்பதன் மூலமாக டேட்டிங்கில் அல்லது காதலின் ஆரம்பக் காலத்தில் அவர்களை எளிதாகப் புரிந்த கொள்ளமுடியும் எனக் கூறியுள்ளார். மேலும் சிலர் அறிமுக சந்திப்பின்போதே இசை குறித்து பேசுவது என்பது வழக்கமாக இருப்பதாகவும் குறிப்பிடுகிறார்.
ஆரம்பக்கட்டம் மட்டுமில்லாமல் காதலில் தொடர்ந்து நாம் நிலைத்திருக்கவும் இசை உதவியாக இருப்பதாகச் சில ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். பாம்ஃபோர்டு என்ற ஆராய்ச்சியாளர், காதலில் மிகவும் நெருக்கமாகவும் பிணைப்போடும் இருக்க இசை உதவுவதாகக் குறிப்பிடுகிறார்.
அதனால்தான் கல்யாணத்தில்கூட இசைக்கு முக்கிய பங்கு உள்ளதாகச் சுட்டிக்காட்டுகிறார். இவ்வாறு இசைக்கும் காதலுக்குமான தொடர்பு காலம் காலமாக நம்முடன் தொடர்ந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.