மதுரையில் இருந்து அமெரிக்கா பறக்கும் பட்டுக்கிளி - கைவினைப் பொருள்கள் தயாரிப்பில...
Vice President: "தமிழரை நிறுத்திவிட்டால் மட்டும் போதுமா?" - சி.பி.ராதாகிருஷ்ணன் குறித்து கனிமொழி
வருகின்ற செப்டம்பர் 9ம் தேதி நடைபெறக் கூடிய துணைக்குடியரசுத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பாகக் களமிறங்கும் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு எதிராக முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி சுதர்சன் ரெட்டியை நிறுத்தியிருக்கிறது இந்தியா கூட்டணி.
கருத்தியல்களுக்கு இடையிலான போர்
சுதர்சன் ரெட்டி தேர்வு குறித்துப் பேசிய திமுக எம்.பி கனிமொழி, "துணைக் குடியரசுத் தலைவர் தேர்தலில் வேட்பாளராக அனைத்து எதிர்க்கட்சிகளும் இணைந்து முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி சுதர்சன் ரெட்டி அவர்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறோம்.

முதலமைச்சர் தெரிவித்ததுபோல இந்தத் தேர்தல் இரண்டு சித்தாந்தங்களுக்கு இடையிலான போராக இருக்கும். பிளவுவாத அரசியலை, இந்துத்துவ அரசியலை எதிர்க்கக்கூடிய தேர்தலாக இந்தத் தேர்தல் அமையும்.
அத்தனை எதிர்க்கட்சிகளிடமும் கருத்துக் கேட்கப்பட்டு ஆலோசனைகள் கேட்கப்பட்டுப் பல கருத்துரையாடல்களுக்குப் பிறகு, நேற்று காங்கிரஸ் தலைவர் கார்கே அவர்கள் தமிழக முதலமைச்சரிடமும் இந்த வேட்பாளரைப் பற்றிப் பேசி அவருடைய ஏற்பையும் பெற்று இந்த வேட்பாளரை இன்று அனைவரும் இணைந்து அறிவித்திருக்கிறோம்" என்றார்.
தமிழர் - ஆர்.எஸ்.எஸ் காரர்!
தேசிய ஜனநாயகக் கூட்டணி தமிழரை நிறுத்தியிருப்பது குறித்த கேள்விக்கு, "இதைத் தமிழர் தமிழரல்லாதவர் தேர்தலாக இல்லாமல், இரண்டு துருவத்தில் இருக்கக் கூடிய கருத்தியல்கள் மோதிக்கொள்ளும் தேர்தலாகப் பார்க்கவேண்டும்.

ஒரு ஆர்.எஸ்.எஸ் பின்புலத்திலிருந்து, பாஜகவின் பிளவுவாத அரசியலை ஆதரிக்கக் கூடிய ஒருவரை எதிர்த்து அத்தனை எதிர்க்கட்சித் தலைவர்களும் ஒருமித்தமாக நிறுத்தியிருக்கக் கூடிய வேட்பாளர் சுதர்சன் ரெட்டி.
தமிழ்நாட்டிலிருந்து பாஜக ஒருவரை நிறுத்தியிருப்பதாகக் கூறுகின்றனர். அவர்கள் தமிழ்நாட்டுக்கு, தமிழ் மக்களுக்கு என்ன செய்திருக்கிறார்கள்? வேட்பாளரை மட்டும் நிறுத்திவிட்டால் தமிழ்நாட்டுக்கு எல்லாம் செய்துவிட்டதாக ஆகிவிடுமா?" எனக் கேள்வி எழுப்பினார் கனிமொழி.
ஏன் சுதர்சன் ரெட்டி?
"அவர் நீதிபதியாக இருக்கும்போதே மக்களுக்கான, அரசியலமைப்பைத் தூக்கிப் பிடிக்கக் கூடிய தீர்ப்புகளை வழங்கியிருக்கிறார். ஓய்வுக்குப் பிறகும் பாஜகவின் பிளவுவாத, இந்துத்துவ அரசியலை எதிர்த்துப் பேசக் கூடிய ஒருவராகச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்" எனப் பதிலளித்தார் கனிமொழி.