அகதிகள் படகு கவிழ்ந்து இந்தியச் சிறுவன் உள்பட 3 பேர் பலி! 5 பேர் மீது வழக்கு!
அமெரிக்காவின் கடல் பகுதியில் அகதிகள் பயணித்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 14 வயது இந்தியச் சிறுவன் உள்பட 3 பேர் பலியாகினர்.
கலிஃபோர்னியா மாகாணத்தின் சான் டியேகோ நகரத்தின் அருகில் பசிபிக் கடல்பகுதியில் கடந்த மே.5 ஆம் தேதியன்று அகதிகள் பயணித்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இந்தியாவைச் சேர்ந்த 14 வயது சிறுவன், மெக்ஸிகோவைச் சேர்ந்த 18 வயது இளைஞர் மற்றும் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் என மொத்தம் 3 பேர் பலியானதாகக் கூறப்படுகிறது.
இதில், பலியான அந்த இந்தியச் சிறுவனின் 10 வயது தங்கை மாயமாகியுள்ளதாகவும் அவரை தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்களின் பெற்றோர் உள்ளிட்ட 4 பேர் இந்த விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து ஏற்பட்டபோது அந்தப் படகில் பயணித்தவர்களில் 9 பேர் மாயமானதாகக் கூறப்பட்ட நிலையில் 10 வயது சிறுமியைத் தவிர மற்ற அனைவரும் அமெரிக்க கடலோரக் காவல் படையினரால் கண்டுபிடிக்கப்பட்டனர்.
மெக்ஸிகோவின் எல்லையிலிருந்து சுமார் 56 கி.மீ. தொலைவில் சிறிய ரக மீன்பிடி படகில் பயணித்த போது இந்த விபத்து அரங்கேறியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, விபத்து நடந்த கடற்கரையில் அவர்களை சட்டவிரோதமாக அமெரிக்காவினுள் அழைத்து வர முயன்ற 2 மெக்ஸிகோ நாட்டு கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் இருவரின் மீதும் உயிரிழப்பை ஏற்படுத்திய ஆள்கடத்தல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இந்தக் குற்றத்திற்காக அவர்களுக்கு ஆயுள் அல்லது மரண தண்டனை விதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
மேலும், அகதிகள் அனைவரும் கரைச் சேர்ந்த பின்னர் அவர்களை அழைத்துச் செல்ல காத்திருந்த மூன்று வாகன ஓட்டிகளும் அமெரிக்க எல்லைப் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மூவரின் மீதும் அகதிகளை சட்டவிரோதமாகக் கொண்டு சென்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த 2023-ல் சாண்டியாகோ கடற்கரையில் அகதிகள் பயணித்த படகு அங்கு நிலவிய கடூம் பனி மூட்டத்தினால் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: ஆபரேஷன் சிந்தூர்: பாகிஸ்தானின் வான்வழித் தடம் மூடல்!