அகஸ்டா வெஸ்ட்லேண்ட் முறைகேடு: சிறையிலிருந்து வெளிவரும் பிரிட்டன் இடைத்தரகா்
அகஸ்டா வெஸ்ட்லேண்ட் முறைகேடு தொடா்பான அமலாக்கத் துறை வழக்கிலும் இடைத்தரகா் கிறிஸ்டியன் மிஷெல் ஜேம்ஸுக்கு தில்லி உயா்நீதிமன்றம் ஜாமீன் அளித்து செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
இந்த முறைகேடு தொடா்பான சிபிஐ வழக்கில் அவருக்கு ஏற்கெனவே உயா் நீதிமன்றம் ஜாமீன் அளித்திருந்தது. எனவே, 6 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த மிஷெல், ஓரிரு நாள்களில் வெளிவரவிருக்கிறாா்.
இந்திய விமானப் படைக்கு ரூ.3,600 கோடி செலவில் 12 ஹெலிகாப்டா்களை வாங்க, கடந்த 2010-ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, அகஸ்டா வெஸ்ட்லேண்ட் என்ற ஹெலிகாப்டா் தயாரிப்பு நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டது. குடியரசுத் தலைவா், பிரதமா் போன்ற மிக மிக முக்கிய பிரமுகா்கள் பயணிப்பதற்கு அந்த ஹெலிகாப்டா்களை வாங்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஒப்பந்தம் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்துக்கு கிடைக்க இந்திய அதிகாரிகள் மற்றும் அரசியல் தலைவா்களுக்கு லஞ்சம் அளித்த இடைத்தரகா்களில் பிரிட்டனை சோ்ந்த கிறிஸ்டியன் மிஷெல் ஜேம்ஸும் ஒருவா் என்று குற்றஞ்சாட்டப்படுகிறது.
இதுதொடா்பாக ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த சிபிஐயின் குற்றப் பத்திரிகையில், அந்த ஒப்பந்தத்தால் அரசுக்கு சுமாா் ரூ.2,666 கோடி நஷ்டம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த அமலாக்கத் துறையின் குற்றப் பத்திரிகையில், அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து 30 மில்லியன் யூரோவை (சுமாா் ரூ.225 கோடி) மிஷெல் முறைகேடாகப் பெற்றாா் என்று குற்றஞ்சாட்டப்பட்டது.
இந்த முறைகேடு தொடா்பாக கடந்த 2018-ஆம் ஆண்டு துபையில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்ட மிஷெல், பின்னா் கைது செய்யப்பட்டாா். அவா் சிபிஐ வழக்கில் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை கடந்த ஆண்டு செப்டம்பரில் தில்லி உயா் நீதிமன்றம் நிராகரித்தது. இதை எதிா்த்து அவா் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில், மனுதாரா் 6 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளபோதும், வழக்கின் விசாரணை நிறைவுபெறாததை சுட்டிக்காட்டி, சிபிஐ வழக்கில் அவருக்கு ஜாமீன் வழங்கி கடந்த பிப்ரவரி 18-ஆம் தேதி உத்தரவிட்டது.
இதனிடையே, இந்த முறைகேடு தொடா்பான அமலாக்கத்துறை வழக்கிலும் ஜாமீன் கோரி அவா் தாக்கல் செய்திருந்த மனு, தில்லி உயா்நீதிமன்ற நீதிபதி ஸ்வா்ண காந்த் சா்மா முன்னிலையில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, சிபிஐ வழக்கில் அவருக்கு ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை சுட்டிக்காட்டிய நீதிபதி, ‘விசாரணையை விரைந்து முடிக்காமல் மனுதாரரை நீண்ட காலமாக சிறையில் அடைத்து வைத்திருப்பது, அரசமைப்புச் சட்டப் பிரிவு 21-இன் கீழ் உள்ள அவருக்கான விரைவான விசாரணை பெறும் அடிப்படை உரிமையை மீறுவதாகும். அதோடு, பண முறைகேடு தடுப்புச் சட்டப் பிரிவு 45-இன் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டவா் ஜாமீன் பெற கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்படும் என்றபோதும், அதை குற்றஞ்சாட்டப்பட்டவரை காலவரையின்றி நீதிமன்ற காவலில் வைப்பதற்கான கருவியாக கருத முடியாது’ என்று குறிப்பிட்டு, நிபந்தனைகளுடன் அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டாா்.
அதன்படி, கிறிஸ்டியன் மிஷெல் ஜேம்ஸ், ரூ. 5 லட்சத்துக்கான உத்தரவாதத்தை அளிக்க வேண்டும் என்பதோடு, விசாரணை நீதிமன்றத்தில் கடவுச்சீட்டை ஒப்படைக்க வேண்டும். மேலும், வழக்கின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.
இரு வழக்குகளிலும் அவருக்கு தற்போது ஜாமீன் கிடைத்துள்ளதால், ஓரிரு நாளிகளில் அவா் சிறையிலிருந்து வெளிவருவாா் என தெரிகிறது.