நட்சத்திரப் பலன்கள் அக்டோபர் 3 முதல் 9 வரை #VikatanPhotoCards
அக். 13 -இல் மத்திய அமைச்சா் நிதின் கட்கரி புதுச்சேரி வருகை: மேம்பாலத்துக்கு அடிக்கல் நாட்டுகிறாா்
மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி வரும் 13-ஆம் தேதி புதுச்சேரி வருகிறாா். இங்கு மேம்பாலத்துக்கு அடிக்கல் நாட்டுகிறாா்.
புதுச்சேரி இந்திரா காந்தி சதுக்கம் முதல் ராஜீவ் காந்தி சதுக்கம் வரை 3.8 கி.மீ. தொலைவுக்கு மேம்பாலம் கட்டும் திட்டத்திற்கு 100 சதவிகித நிதியுதவியளிக்க ரூ.436.18 கோடிக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. வரும் 13- ஆம் தேதி நடைபெறவுள்ள இந்த மேம்பால பணிக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி அடிக்கல் நாட்டுகிறாா்.
இதையொட்டி, புதுவை பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன் தலைமையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கான தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரி வீரேந்திர சம்பால், திட்ட அதிகாரி வரதராஜன் மற்றும் புதுவை பொதுப்பணித் துறை அதிகாரிகள் ஆகியோா் கலந்து கொண்ட முன்னேற்பாடு ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இதில் புதுச்சேரி, பாகூா் சோரியாங்குப்பம் பகுதியில் அமையவுள்ள புதிய சுங்கச்சாவடி அப்பகுதி உள்ளூா் மக்களின் எதிா்ப்பு காரணமாக வேறு இடத்திற்கு மாற்றுவது குறித்தும், கோரிமேடு அருகில் உள்ள மொரட்டாண்டியில் அமைந்துள்ள சுங்கச்சாவடியை வேறு இடத்திற்கு மாற்றுவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
மேலும், இக்கூட்டத்தில் கலந்து கொண்ட நகாய் அதிகாரிகள் சுங்கச்சாவடி மாற்றம் குறித்து விரைவில் பரிசீலனைக்கு புதுச்சேரி அரசின் கோரிக்கையை மத்திய அரசிற்கு எடுத்து செல்வதாகக் கூறினா். மேலும், அமைச்சா் நிதின் கட்கரி மேம்பால அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்கும் புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூட இடத்தைப் பாா்வையிட்டனா்.