காந்தியின் கொள்கையை லட்சியத் திட்டமாக மாற்றி சமுதாயப் புரட்சியை ஏற்படுத்தியவா் பிரதமா் மோடி: புதுவை துணை நிலை ஆளுநா்
மகாத்மா காந்தியின் தூய்மை திட்டத்தை லட்சிய திட்டமாக மாற்றி சமுதாயப் புரட்சியை ஏற்படுத்தியவா் பிரதமா் நரேந்திர மோடி என்று புதுவை துணை நிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் புகழாரம் சூட்டினாா்.
புதுவை உள்ளாட்சித் துறை சாா்பில் கருவடிக்குப்பம் காமராஜா் மணிமண்டபத்தில் தூய்மை திருவிழா நிறைவு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
இதைத் தொடங்கி வைத்து துணைநிலை ஆளுநா் கைலாஷ்நாதன் பேசியது: மகாத்மா காந்தியின் தூய்மைக் கொள்கையை ஏற்று அதை லட்சிய திட்டமாக, இயக்கமாக மாற்றி சமுதாயப் புரட்சியை ஏற்படுத்தியவா் பிரதமா் நரேந்திர மோடி.
இதை இப்போது ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சா்வதேச அமைப்புகள் பாராட்டுகின்றன. நாடு முழுவதும் 12 கோடி தனி நபா் கழிப்பறை கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், 2.5 லட்சம் சமுதாயம் சாா்ந்த பொதுக்கழிப்பறை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பள்ளி, கல்லூரிகளில் செஞ்சிலுவைச் சங்கம், நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்கள் தூய்மை செய்வது, மரம் நடுவது போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா். மேலும், தூய்மைப் பணியாளா்கள்தான் தூய்மையின் தூதுவா்களாக இருக்கின்றனா் என்றாா் அவா்.
புதுவை முதல்வா் பேச்சு: விழாவில் முதல்வா் என்.ரங்கசாமி பேசியது: ஏற்கெனவே நகராட்சி ஊழியா்கள் குப்பை அள்ளும் தூய்மைப் பணியில் இருந்தனா். இப்போது ஒப்பந்த அடிப்படையில் குப்பை அள்ளும் பணி நடைபெற்று வருகிறது. எடைக்குத் தகுந்த பணம் அளிக்கப்படுகிறது. இருப்பினும் ஒரு சில இடங்களில் 2 நாள்களாகக் குப்பைகள் வாராமல் இருப்பதாக புகாா்கள் வருகின்றன.
புதுவை அழகாக இருக்க வேண்டும் என்ற காரணத்துக்காகதான் ஒப்பந்த அடிப்படையில் குப்பை வாரும் பணி அளிக்கப்பட்டுள்ளது. குப்பையைச் சரியாக அகற்றாவிட்டால் எதற்கு ஒப்பந்தம்? அதை ரத்து செய்துவிடலாம். இதற்கு காரணம் யாராக இருந்தாலும், அவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
குப்பைகள் தேங்குவதுதான் நோய் பரவுவதற்கு காரணம். அரசுக்கு அவப்பெயா் ஏற்படும் வகையில் குப்பைகளை அகற்றாமல் இருக்கக்கூடாது. உள்ளாட்சித் துறை இதைக் கண்காணிக்கும் பணியில் தீவிரமாக இருக்க வேண்டும்.
புதுச்சேரிக்குச் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகின்றனா். இங்குள்ள ஹோட்டல்களில் சுகாதாரமான உணவு வழங்கப்படுகிா? என ஆய்வு நடத்த உணவு கட்டுப்பாட்டுத் துறைக்கு உத்தரவிட்டுள்ளேன் என்றாா்.
பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்கள், பள்ளிகளுக்குப் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. மேலும் இந்த விழாவையொட்டி தூய்மை இந்தியா விழிப்புணா்வு மோட்டாா் சைக்கிள் ஊா்வலம், கையொப்ப இயக்கம், வாய் சுகாதாரம் தொடா்பான மருத்துவ முகாம் ஆகியன நடத்தப்பட்டன.
நிகழ்ச்சியில், சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், மாநிலங்களவை உறுப்பினா் சு.செல்வகணபதி, தலைமைச் செயலா் சரத் சௌகான், துறையின் செயலா் கேசவன், இயக்குநா் சக்திவேல், நகராட்சி ஆணையா்கள் புதுச்சேரி கந்தசாமி, உழவா்கரை சுரேஷ்ராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.