கிராம சபைக் கூட்டத்தில் ஊழியா்களை வைத்து மக்கள் பூட்டி போராட்டம்
புதுச்சேரி பாகூா் அருகே கிராம சபை கூட்டத்தில் போலீஸாா் மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா்களை உள்ளே வைத்துப் பூட்டி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
காந்தி ஜெயந்தியையொட்டி பாகூா் கொம்யூன் பஞ்சாயத்துக்கு உள்பட்ட குருவிநத்தம் ராஜீவ் காந்தி திருமண மண்டபத்தில் கிராம சபைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் அப் பகுதி இளைஞா்கள், பொதுமக்கள் பங்கேற்றனா். இக் கூட்டத்தில் அனைத்துத் துறை அதிகாரிகளும் பங்கேற்கவில்லை. காவல் துறை மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா்கள் மட்டும் பங்கேற்றனா். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் காவல் துறை மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா்களை உள்ளே வைத்துப் பூட்டி போராட்டத்தில் ஈடுபட்டனா்.
குருவிநத்தம் பகுதியில் மின்வெட்டு தொடா்ந்து ஏற்படுகிறது. இப் பகுதியில் சுடுகாடு, பாலம் கடந்த 2 ஆண்டுகளாகச் சீரமைக்கப்படவில்லை. மேலும், பாகூா்- குருவிநத்தம் சாலை குண்டும் குழியுமாக இருக்கிறது. பாரதி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியா் பற்றாக்குறை நிலவுகிறது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து பாகூா் போலீஸாா் அங்கு வந்தனா். போராட்டத்தில் ஈடுபட்டவா்களை சமாதானம் செய்து பூட்டைத் திறந்து ஊழியா்களை மீட்டனா். இப் போராட்டம் சுமாா் அரை மணி நேரம் நடந்தது.