அடிப்படை வசதி கோரி பொதுமக்கள் சாலை மறியல்
வேலூா் முள்ளிபாளையம் பகுதியில் அடிப்படை வசதி கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
வேலூா் மாநகராட்சி முள்ளிபாளையத்தில் வீராசாமி 1, 2, 3 ஆகிய தெருக்கள், பாறைமேடு பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்தப் பகுதியில் சாலை, கால்வாய் வசதி செய்யப்படாததுடன், குடிநீரும் சரிவர விநியோகம் செய்யப்படுவதில்லை என அப்பகுதி மக்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகாா் தெரிவித்தனா். எனினும், உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இதனால், அந்தப் பகுதி மக்கள் வேலூா் - பெங்களூரு சாலையில் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்த வேலூா் வடக்கு காவல் ஆய்வாளா் சீனிவாசன், வருவாய்த் துறை அதிகாரிகள் வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமாதன பேச்சு நடத்தினா். அப்போது மாநகராட்சி அதிகாரிகளிடம் பேசி விரைவில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தருவதாக உறுதியளித்தனா்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனா். சாலை மறியல் காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.