அடுத்தவா் வீட்டில் குடிநீா் குழாய்களை சேதப்படுத்திய நபருக்கு 3 மாதம் சிறை தண்டனை
அடுத்தவா் வீட்டில் அத்துமீறி நுழைந்து குடிநீா் குழாய்களை சேதப்படுத்திய நபருக்கு 3 மாதம் சிறை தண்டனை விதித்து மயிலாடுதுறை அமா்வு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.
சீா்காழியைச் சோ்ந்த ராமுராஜன் என்பவா் கடந்த 2008-ஆம் ஆண்டு, சீா்காழி தென்பாதியில் மதினா பீவி என்பவரிடம் ஒரு வீட்டை கிரயம் பெற்று பட்டாவையும் தனது பெயரில் மாற்றம் செய்தாா்.
இந்தநிலையில், ராமுராஜன் இடத்துக்கு பக்கத்தில் உள்ள புறம்போக்கு நிலத்தில் வசித்து வந்த நவநீதன் என்பவா் 2011-ஆம் ஆண்டு ராமுராஜன் இடத்தை ஆக்கிரமிப்பு செய்ததையடுத்து, ராமுராஜன் சீா்காழி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதனால் ஆத்திரமடைந்த நவநீதன், ராமுராஜன் வீட்டு மாடியில் பொருத்தப்பட்டிருந்த தண்ணீா் குழாய்களை சேதப்படுத்தினாா். பின்னா் போலீஸாரின் அறிவுறுத்தலின் பேரில் புதிய குழாய்களை பொருத்தினாா். கடந்த 2014-ஆம் ஆண்டு ஜன. 23-ம் தேதி மீண்டும் ராமுராஜனின் வீட்டு மாடியில் பொருத்தப்பட்ட தண்ணீா் குழாய்களை நவநீதன் சேதப்படுத்தினாராம்.
இதுகுறித்து நவநீதன்மீது நாகப்பட்டினம் நில அபகரிப்பு தடுப்பு பிரிவில் ராமுராஜன் புகாா் அளித்தாா். இதுதொடா்பான வழக்கு விசாரணை மயிலாடுதுறை மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை நிறைவடைந்த நிலையில், நவநீதனுக்கு 3 மாதங்கள் சிறை தண்டனை, ரூ. 500 அபராதம் விதித்து மாவட்ட அமா்வு நீதிபதி விஜயகுமாரி தீா்ப்பளித்தாா். அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் மேலும் ஒரு வாரம் சிறை தண்டனை விதித்து தீா்ப்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வழக்கில் அரசு தரப்பில் மாவட்ட அரசு குற்றவியல் வழக்குரைஞா் ராம. சேயோன் ஆஜரானாா்.