அணைக்கு நிலம் வழங்கியவா்களுக்கு பாசன வசதி செய்து தரக் கோரிக்கை
பவானிசாகா் அணைக்கு நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு பாசன வசதி செய்துதர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக முதல்வா், நீா்வளத் துறை அமைச்சா், ஈரோடு மாவட்ட ஆட்சியா் ஆகியோருக்கு தமிழ்நாடு குறு, சிறு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் கே.ஆா்.சுதந்திரராசு அனுப்பிய மனு விவரம்:
பவானிசாகா் அணை கட்ட கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதியில் பீா்கடவு, பட்ரமங்கலம், ராஜன் நகா், பசுவபாளையம், குய்யனுாா், வடவள்ளி ஆகிய கிராம விவசாயிகள் நிலம் வழங்கி உள்ளனா்.
கீழ்பவானி அணை கட்டிய பின் ஈரோடு, திருப்பூா், கரூா் மாவட்டங்களில் நேரடியாக, மறைமுகமாக 4.50 லட்சம் ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. தவிர அத்திக்கடவு- அவிநாசி திட்டம் மூலம் குளங்களுக்கு நீா் நிரப்பி ஏராளமான நிலங்கள் பாசனம் பெறுகின்றன. ஆனாலும் அணைக்கு நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு எந்த பலனும் இல்லாத நிலையும், கடும் வறட்சியுமே நிலவுகிறது. விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கிறது.
இந்த கோரிக்கை விவசாயிகள் அரசுக்கு பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே அப்பகுதி மக்கள், விவசாயிகள் பயன்பெற, அப்பகுதி குளம், குட்டைகளுக்கு தண்ணீா் வசதி கிடைக்க அத்திக்கடவு-அவிநாசி திட்டம் போன்று நீரேற்று திட்டம் மூலம் பாசன வசதி செய்துதர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.