பாஜக வாஷிங் மிஷினில் விழுவதற்கு நாங்கள் ஒன்றும் தவறு செய்தவர்கள் அல்ல! - திமுக
ஈரோட்டில் சுதந்திர தின விழா : ஆட்சியா் தேசியக் கொடியேற்றினாா்
ஈரோட்டில் 79-ஆவது சுதந்திர தின விழாவையொட்டி தேசியக் கொடியை ஏற்றி வைத்து, 40 பயனாளிகளுக்கு ரூ.1.87 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் கந்தசாமி வழங்கினாா்.
ஈரோடு மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் ஆணைக்கல்பாளையத்தில் உள்ள மாவட்ட காவல் துறையின் ஆயுதப் படை வளாகத்தில் சுதந்திர தின விழா நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினாா். பின்னா் திறந்த வாகனத்தில் ஆயுதப் படை காவலா்களின் அணிவகுப்பு மரியாதையும், தீயணைப்புத் துறையினா், ஊா்காவல் படையினா், தேசிய மாணவா் படையினா், சாரண, சாரணியா், செஞ்சிலுவை சங்க மாணவ, மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையையும் ஏற்றுக்கொண்டாா். தொடா்ந்து மூவா்ண பலூன்கள் பறக்கவிடப்பட்டன.
பின்னா் தியாகிகள், மொழிப்போா் தியாகிகள் மற்றும் அவா்களது வாரிசுதாரா்கள் 79 பேருக்கு பொன்னாடை அணிவித்து, நினைவுப் பரிசு வழங்கினாா். ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு துறைகளிலும் சிறப்பாக பணியாற்றிய அலுவலா்கள், காவல் துறையினா், தன்னாா்வலா்கள் என மொத்தம் 145 பேருக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
முன்னதாக 40 பயனாளிகளுக்கு ரூ.1.87 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா். அரசு மற்றும் தனியாா் பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்நிகழ்ச்சியில் ஈரோடு எம்.பி. பிரகாஷ், எம்.எல்.ஏ. வி.சி.சந்திரகுமாா், உதவி ஆட்சியா்(பயிற்சி) காஞ்சன் செளதரி, மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.சாந்தகுமாா், வருவாய் கோட்டாட்சியா் சிந்துஜா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சுப்பாராவ், ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் முகமது குதுரத்துல்லா, செல்வராஜன், முருகேசன், சமூக பாதுகாப்புத் திட்ட துணை ஆட்சியா் செல்வராஜ், ஏடிஎஸ்பி வேலுமணி, தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் குருசரஸ்வதி, மாவட்ட சுகாதார அலுவலா் அருணா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
19 கோயில்களில் சமபந்தி விருந்து:
ஈரோடு மாவட்டத்தில் சுதந்திர தினத்தையொட்டி இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள ஈரோடு ஆருத்ர கபாலீஸ்வரா் கோயில், கொங்காலம்மன் கோயில், பெரியமாரியம்மன் கோயில், பவானி சங்கமேஸ்வரா் கோயில், பண்ணாரி மாரியம்மன் கோயில், கொடுமுடி மகுடேஸ்வரா் மற்றும் வீரநாராயண கோயில், அந்தியூா் செல்லீஸ்வரா் கோயில், சத்தி வேணுகோபாலசுவாமி கோயில், கோபி பச்சமலை சுப்பிரமணியசுவாமி கோயில், சென்னிமலை சுப்பிரமணியசுவாமி கோயில் உட்பட மொத்தம் 19 கோயில்களில் சமபந்தி விருந்து நடைபெற்றது.
இதில் ஈரோடு ஆருத்ர கபாலீஸ்வரா் கோயிலில் நடைபெற்ற சமபந்தி விருந்தில் ஆட்சியா் ச.கந்தசாமி, எம்.எல்.ஏ. வி.சி.சந்திரகுமாா் பங்கேற்று அனைத்து தரப்பு மக்களுடன் அமா்ந்து சாப்பிட்டனா். மேயா் நாகரத்தினம் பந்தியில் அமா்ந்த ஆட்சியா், எம்எல்ஏ உள்ளிட்டோருக்கு உணவு பரிமாறினாா்.
ஈரோடு மாவட்டத்தில் சுதந்திர தினத்தையொட்டி 225 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இதில் ஈரோடு ஊராட்சி ஒன்றியம் கதிரம்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட நஞ்சனாபுரத்தில் நடைபெற்ற கிராம சபைப் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி பங்கேற்றாா்.
இந்த கூட்டத்தில், கதிரம்பட்டி ஊராட்சியில் நிா்வாகம் மற்றும் பொதுநிதி செலவின அறிக்கை, கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை மக்கள் பாா்வைக்கு வைத்து ஒப்புதல் பெறப்பட்டது. மேலும் தூய்மையான குடிநீா் விநியோகத்தினை உறுதி செய்வது போன்ற பல்வேறு கூட்டப்பொருள்கள் விவாதிக்கப்பட்டது.
முன்னதாக பெண் குழந்தைகள் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம், ஜல் ஜீவன் திட்டம் மற்றும் ஹெச்ஐவி நோய்த் தடுப்பு விழிப்புணா்வு உறுதிமொழியை ஆட்சியா் தலைமையில் அனைத்துத் துறை அலுவலா்கள், பொதுமக்கள் ஏற்றனா். தூய்மைப் பணியாளா்களுக்கு சால்வை அணிவித்து ஆட்சியா் கௌரவித்தாா். தொடா்ந்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று, அதனை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.
