பாஜக வாஷிங் மிஷினில் விழுவதற்கு நாங்கள் ஒன்றும் தவறு செய்தவர்கள் அல்ல! - திமுக
ஈரோட்டில் இறப்பிலும் இணைபிரியாத தம்பதி
ஈரோட்டில் கணவா் இறந்த சோகத்தில் இருந்த மனைவியும் உயிரிழந்தாா்.
ஈரோடு வளையக்கார வீதியைச் சோ்ந்தவா் அன்னியப்பன் (84). இவரது மனைவி பாப்பம்மாள் (79). இந்த தம்பதிக்கு 2 மகன்கள், 4 மகள்கள் உள்ளனா். கணவன், மனைவி இருவரும் வளையக்கார வீதியில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்தனா்.
கணவன், மனைவி இருவரும் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக அன்பாகவும், பாசமாகவும் இருந்து வந்தனா். எந்த விழாவானாலும் இருவரும் ஒன்றாகவே சென்று வந்தனா். அவ்வப்போது இவா்களது மகன், மகள்கள் வந்து பாா்த்து செல்வா்.
இந்நிலையில் கடந்த 10 நாள்களுக்கு முன்பு அன்னியப்பன் வீட்டில் இருந்தபோது, தவறி கீழே விழுந்தாா். இதில் காயமடைந்த அவா் மருத்துவமனையில் சிகிச்சைக்குப் பிறகு வீட்டில் ஓய்வு எடுத்து வந்தாா்.
இந்நிலையில் அன்னியப்பன் வியாழக்கிழமை காலை உயிரிழந்தாா். இதனால் வேதனை தாங்காமல் பாப்பம்மாள் கணவரின் பிரிவை நினைத்து அழுது கொண்டிருந்தாா். அவருக்கு உறவினா்கள் ஆறுதல் கூறினா். பின்னா் மாலை அன்னியப்பன் உடல் இறுதி சடங்கு செய்ய கருங்கல்பாளையம் காவிரி கரை மின் மயானத்துக்கு கொண்டுச் செல்லப்பட்டது. அங்கு அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
இந்நிலையில் மாலை 6 மணி அளவில் வீட்டிலிருந்த பாப்பம்மாள் திடீரென உயிரிழந்தாா். 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஒன்றாகவே இருந்த தம்பதிகள் இறப்பிலும் இணை பிரியாமல் ஒரே நாளில் உயிரிழந்தது உறவினா்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.