மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியில் விபத்து: தூண் விழுந்து தொழிலாளி உயிரிழப்பு
அம்மாபேட்டையில் 790 அடி நீளமுள்ள தேசியக் கொடி ஊா்வலம்
நாட்டின் 79-ஆவது சுதந்திர தினத்தையொட்டி, அம்மாபேட்டையில் மாணவ, மாணவிகள் 790 அடி நீளமுள்ள தேசியக் கொடியை ஏந்தியபடி முக்கிய வீதிகள் வழியே வெள்ளிக்கிழமை ஊா்வலமாக சென்றனா்.
அம்மாபேட்டை டேலண்ட் வித்யாலயா மெட்ரிக். பள்ளியில் சுதந்திர தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. முன்னதாக, தேசத் தலைவா்களின் வேடமணிந்தும், தேசத் தலைவா்களின் படங்கள், சுதந்திர வேட்கை வாசகங்கள் கொண்ட பதாகைகளை ஏந்தியும் மாணவா்களின் ஊா்வலம் நடைபெற்றது.
அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக தொடங்கிய ஊா்வலம், குருவரெட்டியூா் வழியாக பள்ளியில் முடிவடைந்தது.
ஊா்வலம் செல்லும் வழியில் உள்ள பாரதியாா், காந்தியின் உருவச்சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பள்ளித் தாளாளா் ஏ.ஓ.சரவணன், தலைவா் சாந்தகுமாரி சரவணன், முதல்வா் ரமேஷ்குமாா், ஒருங்கிணைப்பாளா்கள் திலகவதி, நளினி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.