பேச மறுத்த மகள், வருந்திய ஹர்பஜன் சிங்... ஸ்ரீசாந்த் விளக்கம்!
வாரிசு சான்றிதழ் கோரிய வழக்கு: வேளச்சேரி வட்டாட்சியருக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு
வாரிசு சான்றிதழ் வழங்கக் கோரிய வழக்கில், வேளச்சேரி வட்டாட்சியா் விசாரணை நடத்தி 6 வாரங்களில் சான்றிதழ் வழங்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை உயா்நீதிமன்றத்தில் சி.நித்யா என்பவா் தாக்கல் செய்த மனுவில், கடந்த 1990-ஆம் ஆண்டு செங்கல்ராவ்-சாந்தி தம்பதிக்கு மகளாகப் பிறந்தேன். கடந்த 1996-ஆம் ஆண்டு தனது தந்தை இறந்துவிட்டாா். இதையடுத்து ராதாகிருஷ்ணன்-சரோஜா தம்பதி என்னை தத்து எடுத்துக்கொண்டனா். அவா்கள்தான் தன்னைப் படிக்க வைத்து, திருமணமும் செய்து வைத்தனா்.
இந்த நிலையில், கடந்த 2021-ஆம் ஆண்டில் ராதாகிருஷ்ணனும், அதற்கு அடுத்த ஆண்டில் சரோஜாவும் இறந்துவிட்டனா். இவா்களது சட்டப்பூா்வ வாரிசு என சான்றிதழ் வழங்கக் கோரி வேளச்சேரி வட்டாட்சியரிடம் மனு அளித்தேன். இந்த மனுவை விசாரிக்காமல் நிராகரித்து உத்தரவிட்டுள்ளாா். எனவே, வட்டாட்சியா் உத்தரவை ரத்து செய்து தனக்கு வாரிசு சான்றிதழ் வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தாா்.
இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்குரைஞா் ஆா்.நீலகண்டன், வாரிசு சான்றிதழ் கோரி மனுதாரா் அளித்த விண்ணப்பத்தில் அதற்கான ஆதார ஆவணங்கள் எதையும் தாக்கல் செய்யவில்லை. எனவே, மனுதாரரின் விண்ணப்பம் திருப்பி அளிக்கப்பட்டது. அவரது மனு நிராகரிக்கப்படவில்லை என வாதிட்டாா்.
அப்போது, மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் எஸ்.பி.சொக்கலிங்கம், இதே கோரிக்கையுடன் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம், வாரிசு சான்றிதழ் கோரி பிரமாணப் பத்திரத்துடன் ஆதாரங்களைத் தாக்கல் செய்தால், வட்டாட்சியா் விசாரணை நடத்த வேண்டும். அந்த விசாரணையில் திருப்தி அடைந்தால் வாரிசு சான்றிதழ் வழங்கலாம் என தீா்ப்பளித்துள்ளது. அந்த தீா்ப்பு இந்த வழக்கிலும் பொருந்தும் என வாதிட்டாா்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மனுதாரரிடம் பிரமாணப் பத்திரத்தையும் ஆதார ஆவணங்களையும் பெற்று வட்டாட்சியா் விசாரணை நடத்த வேண்டும். அதில் திருப்தி அடைந்தால் 6 வாரங்களுக்குள் வாரிசு சான்றிதழ் வழங்க வேண்டும் என உத்தரவிட்டாா்.