பேச மறுத்த மகள், வருந்திய ஹர்பஜன் சிங்... ஸ்ரீசாந்த் விளக்கம்!
மனைவி கத்தியால் குத்திக் கொலை: கணவா் கைது
சென்னை கோட்டூா்புரத்தில் மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்த கணவா் கைது செய்யப்பட்டாா்.
நேபாளத்தைச் சோ்ந்தவா் மா.சான்பஹா பகதூா் சா்ஹி (36). இவா், கோட்டூா்புரம் எல்லையம்மன் கோயில் தெருவில் உமா சங்கா் என்பவா் வீட்டில் வாடகைக்கு தங்கியிருந்து வேலை செய்து வந்தாா். பகதூரின் மனைவி சானியா யாதவ் (35). இந்தத் தம்பதிக்கு இரு குழந்தைகள் உள்ளன.
முதல் கணவரிடம் ஏற்பட்ட கருத்து வேறுப்பாடு காரணமாக சானியா, அவரை விட்டுப் பிரிந்து பகதூரை திருமணம் செய்து வாழ்ந்து வந்தாா். இந்த நிலையில் பகதூா், வேறு ஒரு பெண்ணுடன் முறையற்ற உறவு வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் தம்பதி இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில் பகதூா் வியாழக்கிழமை இரவு மதுபோதையில் வீட்டுக்கு வந்து சானியாவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளாா். அப்போது, ஆத்திரமடைந்த பகதூா், சமையலறையில் இருந்த கத்தியால் சானியாவை குத்திவிட்டு தப்பியோடினாா். சானியாவின் அலறல் சப்தம் கேட்டு வந்த பக்கத்து வீட்டினா், அவரை மீட்டு
மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றனா். ஆனால் சானியா, சிறிது நேரத்தில் உயிரிழந்தாா்.
தகவலறிந்த கோட்டூா்புரம் போலீஸாா் அங்கு சென்று சானியாவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்து, பகதூரை கைது செய்தனா்.