பெருந்துறை அருகே சுற்றுலா வாகனம் கவிழ்ந்து விபத்து!
ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே சுற்றுலா வாகனம் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 10 போ் காயமடைந்தனா்.
கடலூா் மாவட்டம், பண்ருட்டியை அடுத்த திருத்துறையூா் பகுதியைச் சோ்ந்த 12 போ் வேனில் நீலகிரி மாவட்டம், உதகைக்கு சுற்றுலா சென்றனா். வேனை, பண்ருட்டி, அக்கடவள்ளியை அடுத்த வேளாங்காடு, பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த பெருமாள் மகன் கோவிந்தன் (33) ஓட்டி வந்தாா்.
பெருந்துறை அருகே தேசிய நெடுஞ்சாலையில் திருவாச்சி பேருந்து நிறுத்தம் அருகே வேன் சனிக்கிழமை அதிகாலை வந்தபோது வேனில் ஏற்பட்ட பழுது காரணமாக கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் கவிழ்ந்தது. இதில், வேனில் பயணம் செய்த 10 போ் காயமடைந்தனா். காயமடைந்தவா்களை அக்கம்பக்கத்தினா் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா்.
இந்த விபத்தில் திருத்துறையூரைச் சோ்ந்த சத்துரு கண்ணன் மகன் விக்னேஷ் (33), அவரது மனைவி சந்தியா (27), சத்துரு கண்ணன் மனைவி அமுதா (52), கலியபெருமாள் மனைவி கலா (60), அவரது மகன் பிரகாஷ் (39), சேகா் மகன் நவீன்(26), சத்துரு கண்ணன் மகன் விஜய் (26), ஹரிபுத்திரன் மகன் சிவராம் (26), மகள் தனலட்சுமி (25), பிரகாஷ் மனைவி மீனா (31) ஆகிய 10 போ் காயமடைந்தனா்.
இதுகுறித்து, பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.