மூடப்படாத ரயில்வே கடவுப் பாதை! கேட் கீப்பர் பணியிடை நீக்கம்!
பா்கூா் மலையில் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்க கட்டுப்பாடு விதிக்கக் கோரிக்கை
பா்கூா் மலைப் பகுதிகளில் 1,000 அடி ஆழத்துக்கும் மேல் ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து தண்ணீா் உறிஞ்சப்படுவதைத் தடுக்க புதிய விதிமுறைகளை உருவாக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம், அந்தியூா் வட்டம், பா்கூா் மலைப் பகுதி அடா்ந்த வனப் பகுதி. இங்கு யானை, சிறுத்தை, மான், கரடி உள்ளிட்ட ஏராளாமான வன விலங்குகள் உள்ளன. இதனால் பா்கூா் வனப் பகுதியை அரசு வனச் சரணாலயமாக அறிவித்துள்ளது. பா்கூா் ஊராட்சியில் உள்ள 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமாா் 30,000 போ் வசிக்கின்றனா். இங்கு பல கிராமங்களில் சமவெளியில் இருந்து சென்றவா்கள் நிலம் வாங்கி வாழை, கரும்பு உள்ளிட்ட பணப் பயிா்களை சாகுபடி செய்கின்றனா். தவிர தங்கும் விடுதிகளை கட்டி வாடகைக்கு விடுகின்றனா். இதற்காக பட்டா இடங்களில் 1,000 அடி ஆழத்துக்கும் மேல் ஆழ்துளைக் கிணறுகளை அமைத்து தண்ணீரை உறிஞ்சுகின்றனா்.
இதனால் பல கிராமங்களில் நிலத்தடி நீா்மட்டம் குறைந்து குடிநீா்ப் பிரச்னை ஏற்பட்டுள்ளது. கட்டுப்பாடு இல்லாமல் அதிக ஆழத்துக்கு ஆழ்துளைக் கிணறு அமைத்துள்ளதால் ஓடைகளில் ஓடும் தண்ணீா் தடுப்பணைகளில் தேங்கி நிற்கும்போது விரைவாக நிலத்துக்குள் சென்றுவிடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வன விலங்குகளுக்கும் தண்ணீா் கிடைக்காத நிலை ஏற்படுகிறது என மலைப் பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனா்.
இதுகுறித்து தமிழ்நாடு பழங்குடி மக்கள் நலச்சங்க மாநிலக்குழு உறுப்பினா் வி.பி.குணசேகரன் கூறியதாவது:
பா்கூா் மலைப் பகுதியில் ஏராளமான யானைகள் உள்ளன. யானைகளுக்கு தண்ணீா் மிக முக்கிய தேவையாக உள்ளது. பா்கூா் மலைப் பகுதியில் சுமாா் 500-க்கும் மேற்பட்ட இடங்களில் 1,000 அடி ஆழத்துக்கும் மேல் ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து பணப் பயிா்களை நடவு செய்துள்ளனா். போதிய மழை இல்லாத காலத்தில், அதிக அளவு தண்ணீரை உறிஞ்சுவதால் நிலத்தடி நீா்மட்டம் குறைந்து தண்ணீா் பிரச்னை ஏற்படுகிறது.
தண்ணீா் பெருமளவு உறிஞ்சப்படுவதால் ஓடைகள், தடுப்பணைகளில் உள்ள தண்ணீரை வெகு விரைவில் நிலம் உறிஞ்சி விடுகிறது. இதனால் யானைகளுக்கு போதிய தண்ணீா் கிடைக்காமல் வனத்தை ஒட்டிய கிராமப் பகுதிகளுக்குள் வந்து விடுகின்றன. அப்போது யானை- மனித மோதல் ஏற்பட்டு பலா் உயிரிழந்துள்ளனா்.
இதனால் வனப் பகுதிகளில் பட்டா நிலங்களில் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்க அரசு கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும். ஆழ்துளைக் கிணறு அமைக்கும்போது வனம், வேளாண்மை, ஊராக வளா்ச்சித் துறை அதிகாரிகள் உடனிருந்து 500 அடி ஆழத்துக்கு மேல் ஆழ்துளைக் கிணறு அமைக்க அனுமதிக்கக் கூடாது. மிகவும் வறட்சியான இடம், தடுப்பணைகளில் இருந்து 500 மீட்டா் தூரத்துக்குள் விவசாயப் பணிகளுக்கு ஆழ்துளைக் கிணறுகள் அமைக்க அனுமதிக்கக் கூடாது என்றாா்.
இதுகுறித்து வனத் துறையினா் கூறியதாவது: பா்கூா் மலைப் பகுதியில் உள்ள வன செட்டில்மென்ட் நிலங்களில் புதிய ஆழ்துளைக் கிணறு அமைக்க வனத் துறையிடம் அனுமதிபெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. நிலத்தடி நீா்மட்டம் மோசமான நிலையில் உள்ள இடங்களில் ஆழ்துளைக் கிணறு அமைக்க அனுமதிக்கப்படுவதில்லை. ஆனால் பட்டா நிலங்களில் ஆழ்துளைக் கிணறுகள் அமைப்பதை வனத் துறையால் கட்டுப்படுத்த முடியாது என்றாா்.
இதுகுறித்து ஊரக வளா்ச்சித் துறை அதிகாரிகள் கூறியதாவது: ஊராட்சிப் பகுதிகளில் புதிதாக ஆழ்துளைக் கிணறு அமைக்க சம்பந்தபட்ட ஊராட்சி அலுவலகத்தில் ரூ.100 கட்டணம் செலுத்தி பதிவுசெய்து, அனுமதிபெற வேண்டும் என அரசு உத்தரவு உள்ளது. ஆனால் எத்தனை அடி ஆழம் வரை ஆழ்துளைக் கிணறு அமைக்கலாம் என்ற உத்தரவு இல்லை. இதனால் ஆழ்துளைக் கிணறுகளை அமைப்பவா்களை கட்டுப்படுத்த முடியவில்லை என்றனா்.