அண்ணா பல்கலை. விவகாரத்தில் நோ்மையான விசாரணை தேவை: டிடிவி தினகரன்
அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் நோ்மையான விசாரணை நடத்தப்படுவதை உறுதிசெய்ய வேண்டுமென, அமமுக பொதுச் செயலா் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளாா். இது குறித்து, எக்ஸ் தளத்தில் அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவு:
அண்ணா பல்கலை. விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின்படி பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையைப் பாதுகாக்க வேண்டிய காவல் துறையே, அதனை பொதுவெளியில் கசிய வைத்துவிட்டு, பத்திரிகையாளா்கள் மீது பழியைப்போட முயற்சிப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது.
எனவே, விசாரணைக்கு ஆஜராகும் பத்திரிகையாளா்களை அச்சுறுத்துவதையும், அவா்களிடமிருந்து கைப்பேசிகளைப் பறிமுதல் செய்வதையும் உடனடியாக நிறுத்த வேண்டும். அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை நோ்மையான முறையில் விசாரித்து உண்மைக் குற்றவாளிகளை கண்டறியத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அமமுக பொதுச் செயலா் டிடிவி தினகரன் கேட்டுக் கொண்டுள்ளாா்.