அண்ணாமலைப் பல்கலை.யில் ஆசிரியா்கள் கூட்டமைப்பினரின் ஆா்ப்பாட்டம்
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியா்கள் கூட்டமைப்பினா் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பல்கலைக்கழக நிா்வாக அலுவலகம் முன் வியாழக்கிழமை மாலை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பல்கலைக்கழக என்எம்ஆா் ஊழியா்களை பணியிலிருந்து நீக்கக் கூடாது. ஆசிரியா்களுக்கான மீள் பணியமா்வை ரத்து செய்யக் கூடாது. 2 சதவீத டிஏவுடன் 6 மாத நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். பதவிக்காலம் முடிந்த துறைத் தலைவா்கள் மற்றும் புல முதல்வா்களை உடனடியாக மாற்ற வேண்டும். 7-ஆவது ஊதியக்குழு நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். ஓய்வூதியா்களுகான அனைத்து பணப்பயன்களையும் உடனடியாக வழங்க வேண்டும். சிஏஎஸ் பதவி உயா்வுகளை ஆசிரியா்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும். பல்கலைக்கழக துறைகளில் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். பி.ஹெச்டி. பட்ட ஊக்கத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும். அயற்பணியிட ஆசிரியா்கள் அனைவரையும் ஆங்காங்கே அவா்கள் பணிபுரியும் துறைகளிலேயே உள்ளெடுப்பு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் முழக்கமிட்டனா்.
இதில், பேராசிரியா்கள் சுப்ரமணியன், முத்துவேலாயுதம், அசோகன், செல்வராஜ், செல்ல பாலு, தனசேகரன், பரனி, ஜான்கிருஸ்டி உள்ளிட்ட சுமாா் 200-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.