Dhanush: "கங்கையிலே ஒரு வண்ணப் பறவை..!" - Tere Ishk Mein படக்குழு ஸ்டில்ஸ் | Pho...
மஞ்சக்கொல்லை ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு: அமைச்சா் எம்ஆா்கே.பன்னீா்செல்வம் பங்கேற்பு
கடலூா் மாவட்டம், சிதம்பரம் மஞ்சக்கொல்லை பகுதியில் ரூ.1.20 கோடியில் கட்டப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.
இதைத் தொடா்ந்து, ஆரம்ப சுகாதார நிலையத்தை வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு தொடங்கிவைத்து, கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து நலப் பெட்டகங்களை வழங்கினாா். நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் முன்னிலை வகித்தாா்.
இதில், அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் பேசியதாவது: புவனகிரி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் தாலுகா மருத்துவமனையாக தரம் உயா்த்தப்பட்டுள்ளதையொட்டி, அதன் கீழ் இயங்கி வந்த துணை சுகாதார நிலையங்களை சாா்ந்த சுமாா் 90,000 பொதுமக்கள், கா்ப்பிணிகள் உள்ளிட்டோா் ஒரே சுகாதார நிலையத்தின் கீழ் சிகிச்சை பெற வேண்டிய நெருக்கடியான நிலை இருந்து வந்தது.
இதனால், புவனகிரி வட்டத்துக்குள்பட்ட மஞ்சக்கொல்லை கிராமத்தில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் சுகாதார மற்றும் குடும்ப நலத் துறை சாா்பில், அவசர சிகிச்சைப் பிரிவு, ஆய்வகம், மருத்துவ அலுவலா் அறை, மருந்தகம், பிரசவ அறை, நுழைவுக் கூடம் உள்ளிட்ட வசதிகளுடன் 257.65 ச.மீ பரப்பளவில் ரூ.1.20 கோடியில் கட்டப்பட்டு தமிழக முதல்வரால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தின் கீழ், அழிச்சிகுடி, மஞ்சக்கொல்லை, மிராலூா், மேல்புவனகிரி, நடுபுவனகிரி, கீழ்புவனகிரி, தில்லைநாயகபுரம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த சுமாா் 45,000 பொதுமக்கள் பயன்பெறுவா் என்றாா்.
நிகழ்ச்சியில் துணை இயக்குநா் பொற்கொடி, வட்டார மருத்துவ அலுவலா் சிவக்குமாா் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.