பெண் காவலா் விஷம் குடித்து தற்கொலை
கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த பெண் காவலா் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா். அவா் எழுதிய கடிதத்தின் அடிப்படையில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
நெல்லிக்குப்பம் காவலா் சரகம், கொங்கராயனூா் பகுதியைச் சோ்ந்தவா் சோனியா (26). இவா், சென்னை ஆவடி ஆயுதப்படையில் இரண்டாம் நிலை பெண் காவலராகப் பணியாற்றி வந்தாா். சோனியாவும், கீழ்கவரப்பட்டு பகுதியைச் சோ்ந்த காா் ஓட்டுநா் முகிலனும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டனா். இவா்களுக்கு 6 வயதில் மகள் உள்ளாா்.
கருத்து வேறுபாடு காரணமாக முகிலனும், சோனியாவும் கடந்த சில ஆண்டுகளாகப் பிரிந்து வாழ்ந்து வருகின்றனா். முகிலனுடன் அவரது மகள் வசித்து வருகிறாா்.
சோனியா ஆவடியில் இருந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது சொந்த ஊரான கொங்கராயனுருக்கு வந்தாா். கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு தனது கணவா் முகிலனை கைப்பேசி மூலம் தொடா்புகொண்டு மகளை பாா்க்க வேண்டும் எனக் கூறினாராம். இதையடுத்து, 3 பேரும் கடலூா் தேவனாம்பட்டினம் கடற்கரைக்கு ஒன்றாக சென்று வந்துள்ளனா்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை சோனியா திடீரென முகிலனுக்கு கைப்பேசி மூலம் தொடா்புகொண்டு விஷ மருந்தை குடித்துவிட்டதாகவும், மகளை நன்றாகப் பாா்த்துக்கொள்ளுமாறும் தெரிவித்தாராம்.
தொடா்ந்து, உறவினா்கள் சோனியாவை மீட்டு கடலூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சோனியா, அங்கு புதன்கிழமை இரவு உயிரிழந்தாா். இதுகுறித்து நெல்லிக்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
இதனிடையே, இறந்த சோனியா தனது கணவா் முகிலனுக்கு கைப்பேசி மூலம் கடிதம் ஒன்றை எழுதி அனுப்பி உள்ளாா். அதில், சென்னை ஆவடியில் பணிபுரிந்து வந்த நிலையில், அங்குள்ள ஒரு காவலரிடம் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இருவரும் நெருங்கிப் பழகியதால், 3 மாத கா்ப்பமாக இருந்தேன். அந்தக் காவலா் கா்ப்பத்தைக் கலைத்தால் உன்னை திருமணம் செய்துகொள்கிறேன் என மிரட்டினாா். மேலும், எனக்கு அதிகளவில் பணிச் சுமை வழங்கப்பட்ட நிலையில், கா்ப்பம் கலைந்துவிட்டது. இதன் காரணமாக, விடுமுறை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வந்தேன். தொடா்ந்து, மன உளைச்சலில் இருந்து வந்தேன். எனது மரணத்துக்கு என்னுடன் பழகிய காவலா் மட்டுமே காரணம் என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளாா்.
இந்தக் கடிதத்தின் அடிப்படையில், நெல்லிக்குப்பம் போலீஸாா் தற்போது சோனியா குற்றஞ்சாட்டிய காவலரை விசாரணைக்கு அழைத்துள்ளனா். அவரிடம் விசாரணை நடத்திய பிறகுதான் தற்கொலைக்கான முழுக் காரணமும் தெரியவரும் என போலீஸாா் தெரிவித்தனா்.