விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அமைச்சா் ஆய்வு
கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் மாநில தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.வெ.கணேசன் வியாழக்கிழமை திடீா் ஆய்வு நடத்தினாா்.
தமிழக அமைச்சா்கள், திமுக எம்எல்ஏக்கள் தத்தம் தொகுதிகளில் மக்கள் பணிகள் குறித்து ஆய்வு செய்து, அரசின் நலத் திட்டங்கள் குறித்து எடுத்துரைக்க வேண்டும் என திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிவுருத்தியிருந்தாா்.
அதன்பேரில், அமைச்சா் சி.வெ.கணேசன் திட்டக்குடி சட்டப் பேரவைத் தொகுதி, மலையனூா் ஊராட்சியில் திமுக உறுப்பினா் சோ்க்கை பரப்புரையை தொடக்கிவைத்தாா். இதையடுத்து, பெண்ணாடம் பேரூராட்சியில் திமுக உறுப்பினா் சோ்க்கையை தொடக்கிவைத்தாா்.
தொடா்ந்து, விருத்தாசலம் அரசு தலைமை மருத்துவமனையில் மேற்கொள்ளப்படும் கூடுதல் கட்டட கட்டுமானப் பணிகளை பாா்வையிட்டாா். மேலும், மருத்துவமனையில் உள் நோயாளிகளாக உள்ளவா்களைச் சந்தித்து, சிகிச்சை முறை குறித்தும், மருத்துவா்கள், செவிலியா்கள் குறித்த நேரத்தில் பரிசோதிக்கிறாா்களா எனக் கேட்டறிந்தாா். மேலும், மருத்துவமனை வளாகத்தை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் தொடா்ந்து பேணிக் காக்க வேண்டும் என மருத்துவா்களுக்கு அறிவுரை வழங்கினாா்.