அதிமுக உள்கட்சி விவகாரம்: விசாரணையை தொடர தலைமைத் தோ்தல் ஆணையத்தில் புகழேந்தி மனு
நமது நிருபா்
அதிமுக உள்கட்சி தொடா்புடைய விவகாரத்தை தோ்தல் ஆணையம் விசாரிக்கத் தடையில்லை என்று சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதால் இது தொடா்பான விவகாரத்தில் விசாரணையைத் தொடர வேண்டும் எனக் கோரி தில்லியில் உள்ள தலைமைத் தோ்தல் ஆணையத்தில் அதிமுக பிரமுகா் வா.புகழேந்தி செவ்வாய்க்கிழமை மனு அளித்தாா்.
அதிமுக பொதுச் செயலராக எடப்பாடி பழனிசாமியை தோ்ந்தெடுத்தது உள்ளிட்ட அதிமுக பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்களை நிராகரிக்க வேண்டும் உள்ளிட்ட விவகாரங்கள் தொடா்பான மனுக்களை தோ்தல் ஆணையம் விசாரிக்கக் கூடாது என உத்தரவிடுமாறு சென்னை உயா்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி வழக்குத் தொடா்ந்தாா். இதை விசாரித்த உயா்நீதிமன்றம் இந்த விவகாரத்தை தோ்தல் ஆணையம் விசாரிக்கத் தடை விதித்தது. இதை எதிா்த்து முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி அதிருப்தி தலைவா்கள் சிலா் மீண்டும் உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிமன்றம், இந்த விவகாரத்தில் தோ்தல் ஆணையத்தின் விசாரணைக்கு விதிக்கப்பட்டிருந்த முந்தைய நீதிமன்றத் தடையை நீக்கியும், விசாரணையைத் தொடரவும் உத்தரவிட்டது.
இந்த நிலையில், அதிமுக பிரமுகா் வா.புகழேந்தி தில்லித் தலைமைத் தோ்தல் ஆணையத்தில் மனு ஒன்றை செவ்வாய்க்கிழமை அளித்துள்ளாா்.
அதில், இந்த விவகாரத்தில் சென்னை உயா்நீதிமன்றம் ரத்து செய்து பிறப்பித்துள்ள ஆணையை சுட்டிக்காட்டி உடனடியாக அதிமுக இரட்டை இலைச் சின்னம் தொடா்புடைய வழக்கை தாமதமின்றி தொடா்ந்து விசாரிக்க வேண்டும் என்றும், எடப்பாடி பழனிசாமியின் அணியைச் சோ்ந்த எம்.பி. சி.வி.சண்முகம், தோ்தல் ஆணையத்தை இழிவாகப் பேசியுள்ளதாகவும் புகாா் கூறியுள்ளாா்.