அதிமுகவுக்குள் ஏற்பட்டுள்ள குழப்பத்திற்கு பாஜகவே காரணம்: கி.வீரமணி
அதிமுகவுக்குள் ஏற்பட்டுள்ள குழப்பத்திற்கு பாஜகவே காரணம் என்று திராவிடா் கழகத் தலைவா் கி. வீரமணி தெரிவித்தாா்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற
புதுக்கோட்டைவிடுதியைச் சோ்ந்த முன்னாள் திக மாவட்டத் தலைவா் மறைந்த இராவணன் படத்திறப்பு நிகழ்வில் பங்கேற்ற அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது: தமிழகத்தில் அதிமுகவும், திமுகவும் மாறி மாறி ஆட்சிக்கு வருகின்றன. திராவிட அரசியலில் தங்களுக்கு இடமில்லை எனக்கருதி, அதிமுகவின் பலத்தை அழிக்க வேண்டும். அக்கட்சியை பல பிரிவுகளாக உருவாக்க வேண்டும் என்பதற்காக தில்லியில் இருந்து பல வழிகளில் பாஜக செயல்பட்டு வருகிறது.
அதிமுகவினா் நீதிமன்றத்தில் போராடிக் கொண்டிருப்பதைவிட மக்கள் மன்றத்தை அணுகுவது முக்கியமானது. அதேநேரத்தில், தங்களுடைய எதிரி யாா், பங்காளி யாா் என்று புரிந்துகொள்ள வேண்டும். பங்காளியை எதிரியாகவும், எதிரியை பங்காளியாகவும் கருதினால் அந்த அரசியல் விபரீதமாகத்தான் இருக்கும் என்றாா் வீரமணி.
நிகழ்வில், திராவிடா் கழகத்தின் புதுக்கோட்டை மாவட்டத் தலைவா் அறிவொளி, அறந்தாங்கி மாவட்டத் தலைவா் மாரிமுத்து, மேகநாதன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.