அத்திக்கடவு-அவிநாசி திட்டம் விடுபட்ட பகுதிகளிலும் நிறைவேற்றப்படும் -அமைச்சா் துரைமுருகன் உறுதி
அத்திக்கடவு - அவிநாசி திட்டம் விடுபட்ட பகுதிகளிலும் நிறைவேற்றப்படும் என்று நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன் கூறினாா்.
ஊரக வளா்ச்சித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அதிமுக உறுப்பினா் ஏ.கே.செல்வராஜ் பேசியதாவது:
அத்திக்கடவு - அவிநாசி திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. விடுபட்ட பகுதிகளுக்கும் இந்தத் திட்டம் வேண்டும் என்று பலமுறை கோரப்பட்டுள்ளது. அந்தத் திட்டமும் அறிவிக்கப்பட்டு, ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால், தாமதமாகிறது. அந்தத் திட்டத்தை நிறைவேற்றுவீா்களா, இல்லையா என்று நீா்வளத் துறை அமைச்சா் கூற வேண்டும் என்றாா்.
அப்போது அமைச்சா் துரைமுருகன் குறுக்கிட்டு கூறியதாவது:
அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தில் விடுபட்ட பகுதிகள் அதிகம். அந்தத் திட்டம் வராது என்று தங்கள் ஊருக்கு வேண்டாம் என்று மக்கள் அப்போது கூறினா். இப்போது தண்ணீா் வருவதைப் பாா்த்து, எங்களுக்கும் வேண்டும் என்று கூறுகின்றனா். விடுபட்ட பகுதிகளுக்கு திட்டத்தை நிறைவேற்ற ரூ. 6 ஆயிரம் கோடி வரை நிதி தேவைப்படுகிறது. நிதிநிலைமைக்கு ஏற்ப திட்டம் நிறைவேற்றப்படும். எந்தக் குளத்தையும் விட்டுவிட வேண்டும் என்று எந்த அரசும் நினைக்காது. விவசாயிகளின் நலன் காப்பதில் நான் பின்னடைய மாட்டேன் என்றாா் அவா்.