செய்திகள் :

`அந்த உயிர்போனதுக்கு நானும் தான காரணம்' - யூடியூபரின் அந்த வீடியோவும், என் நினைவலைகளும்

post image

அந்தப் பிரபல யூடியூபர் காரில் இருந்து மற்றவர்களுக்கு உதவி செய்ததையும், உதவி பெறுபவர்களின் இயலாமையைப் பார்த்து கேலி செய்து அதை வீடியோவாக பதிவிட்டு இருப்பதையும் பார்த்தேன். அந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் முட்டை கேட்ட மாணவர்களை, சத்துணவு ஊழியர் துடைப்பத்தால் அடிக்கும் வீடியோ ஒன்றைப் பார்க்க நேர்ந்தது. 'ஒருவரின் இயலாமையும், தேவையும் சமூகத்தில் அவ்வளவு இழிவாகிவிட்டதா?' என்ற மனஅழுத்தத்துடன் இன்றைய பயணம் தொடங்கியது.

கொளுத்தும் வெயில் சற்றே தளர்ந்து முகத்தில் சாரல் விழுந்தது... பழைய நினைவுகளை மனதில் அசை போடத் தொடங்கினேன்.

எட்டாம் வகுப்பு கோடை விடுமுறை...
எட்டாம் வகுப்பு கோடை விடுமுறை...

எட்டாம் வகுப்பு முழு ஆண்டுத் தேர்வு தொடங்கிய தருணம் அது. முழு ஆண்டுத் தேர்வு தொடங்கிவிட்டால், எல்லா நாளிலும் கனி அக்காவை கட்டாயம் பார்த்து, என் இருப்பை பதிவுசெய்து விடுவேன்.

பரீட்சை முடிய இன்னும் 5 நாள், 4 நாள் என மனதில் எண்ணிக்கொண்டே இருப்பேன். விடுமுறை தொடங்கியதும் என்னுடைய முதல் வேலை கனி அக்கா வீட்டிற்குச் செல்வதுதான். கனி அக்கா பள்ளியில் எனக்கு சீனியர். வசதியான வீட்டுப் பெண். ஒவ்வொரு வருடமும் கோனார் தமிழ் உரையை புதிதாக வாங்குவார்.

நோட்ஸ் வாங்கியதும், 'ஆ.கனிமொழி' என பெயர் எழுதுவதில் தனி சந்தோசம் இருப்பதாக அடிக்கடி சொல்வார். அதே நோட்ஸை அடுத்த வருடம் நான் வாங்கிப் படிப்பேன். கனி அக்கா பெயருக்கு கீழ் என் பெயர் இருக்கும். ஒரு முறையாவது புது நோட்ஸ் வாங்கி என் பெயரை முதலில் எழுத வேண்டும் என்பது என் பல நாள் ஆசை. எனக்கு அடுத்து என் ஜூனியர் முருகம்மாள் அந்த நோட்ஸை வாங்கிப் படிப்பாள்.

என் பெயருக்குக் கீழ் அவள் பெயர் இருக்கும். இப்படி பல கைகள் கடக்கும் போது நோட்ஸின் நிறம் மங்கியிருக்கும். கடைசி பக்கம் ஒட்டப்பட்டு, கிழிந்த பேப்பர்கள் எல்லாம் புதையல்போல அங்காங்கே நோட்ஸின் மற்ற பக்கங்களில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும். இறுதியாக பாண்டியன் அண்ணாச்சியின் பேப்பர் கடைக்கு எடைக்கு சென்று, மீண்டும் மளிகைக் கடைகளில் பொட்டலங்களாக சுருட்டப்பட்டு எங்கள் வீட்டுக்கே வரும். ஒரு முறை பொட்டுக்கடலை மடிக்கப்பட்ட பேப்பரை பிரித்துப் பார்த்தேன்.

கோனார் தமிழுரையில் இரண்டாம் இடத்தில் என் பெயர்...
கோனார் தமிழுரையில் இரண்டாம் இடத்தில் என் பெயர்...

ஆறாம் வகுப்பு கோனார் தமிழ் உரையின் முதல் பக்கம். மொத்தமாக அதில் ஏழு பேரின் பெயர் இருந்தது. அதில் என் பெயர் இரண்டாம் இடம். நம்ம பேரு முதல்ல இருந்தா நல்லா இருந்திருக்கும் என நினைத்துக் கொண்டேன். அந்த இயலாமையின் ஏக்கம் இன்னும் தீரவில்லை என்றுதான் சொல்லவேண்டும். இப்போதும் என் மகளின் புது நோட்டுப் புத்தகங்களில் அவளின் பெயரை எழுதும் போது, அந்த ஆசை மனதுக்குள் வந்து போகும். 

வழக்கம்போல் எட்டாம் வகுப்பு தேர்வு முடிந்ததும் கனி அக்கா வீட்டிற்கு நோட்ஸ் வாங்கச் சென்றேன். நோட்ஸை கையில் வாங்கியது அட்டை போட்டு பெயர் எழுத பக்கத்து வீட்டில் இருந்து நியூஸ் பேப்பரை வாங்கி வைத்திருந்தேன்.

'எங்க அம்மா நோட்ஸ ஃப்ரீயா குடுக்காத, பாதி விலைக்குக் குடு'னு சொல்லிட்டாங்கல. இந்த நோட்ஸோட விலை  27 ரூபா. நீ 13 ரூபா கொடுத்து வாங்கிக்கிறியா?' என்று கனி அக்கா கேட்ட உடன் எனக்கு மனசே உடைந்துவிட்டது.

கனி அக்கா கொடுத்த அதிர்ச்சி |கோடை மழையில் சிறுமிகள்
கனி அக்கா கொடுத்த அதிர்ச்சி |கோடை மழையில் சிறுமிகள்

அட்டை போட்டு பெயர் எழுதும் கனவெல்லாம் ஒரு நிமிடத்தில் உடைந்ததுபோல் ஆகிவிட்டது. 'சரிக்கா நான் அம்மாகிட்ட கேட்டு வரேன்' எனச் சொல்லிவிட்டு வீட்டிற்கு வந்துவிட்டேன். அம்மாவிடம் கேட்டதற்கு, 'ஒழுங்கா டீச்சர் எழுதிப் போடுறத பார்த்து படி'னு சொல்லிட்டாங்க. அடம் பிடித்தும் 13 ரூபாயை வாங்க முடியவில்லை. பழைய புத்தகங்கள் விற்கும் கடையிலும் தேடிப்பார்த்தேன்.

'ஒரு நோட்ஸ்தான் விலைக்கு வந்துச்சு. அதையும் பாலாஜி வந்து வாங்கிட்டு போயிட்டான்ம்மா' என்று பழைய புத்தகக் கடைக்காரர் சொல்ல, கிட்டத்தட்ட அழுகையே வந்தவிட்டது. அந்த வருட லீவு நோட்ஸ் கிடைக்காத என்ற சோகத்திலேயே கழிந்தது. 

விடுமுறை நேரத்தில் வாடகை சைக்கிள் ஓட்டிய போது அர்ச்சனா அக்கா எனக்கு அறிமுகம் ஆனாள். பத்தாம் வகுப்பு செல்வதாகவும், பக்கத்து ஊரில் இருக்கும் மெட்ரிக் பள்ளியில் படிப்பதாகவும் சொன்னார். சில நாள் பழக்கத்தில் அர்ச்சனா அக்காவுடன் நல்ல நெருக்கம் வந்துவிட்டது. திடீரென்று ஒரு நாள் ,'ஏல நீ நோட்ஸெல்லாம் வாங்கிட்டியா? மத்த பாட நோட்ஸ் எல்லாம் இங்கிலீஷ்ல இருக்கும். தமிழ் நோட்ஸ் மட்டும் நீ வாங்கிக்கிறியா?னு கேட்டாங்க. அர்ச்சனா அக்காவும் நோட்ஸ்க்கு காசு கேட்டால் என்ன செய்வது என ஒரு தயக்கம். 'அம்மாகிட்ட கேட்டு சொல்றேன்க்கா' என்று சமாளித்தேன்.

வாடகை சைக்கிள் ஓட்டுவாடகை சைக்கிள் ஓட்டும்போது நட்பான அர்ச்சனா அக்கா!
வாடகை சைக்கிள் ஓட்டும்போது நட்பான அர்ச்சனா அக்கா!

ஒரு விட்டு வாசலில் சைக்கிளை நிறுத்தியவர், 'இதுதான் எங்க வீடு' என காரை வீட்டை அறிமுகம் செய்தார். 'இருல தண்ணீ குடிச்சுட்டு வர்றேன்'னு அர்ச்சனா அக்கா உள்ளே போச்சு. வரும்போது அது கையில் பிரவுன் ஷீட் போட்ட புத்தகம் ஒன்று கையில் இருந்தது. 'இந்தா தமிழ் நோட்ஸ் எடுத்துட்டு போ... உங்க அம்மா வாங்கக்கூடாதுனு சொல்லுச்சுனா, திரும்பிக்கொண்டு வந்துரு' என கையில் நோட்ஸைத் திணிக்க, 'அக்கா... ஆஆஆ' என இழுத்து, 'காசு எதுவும் குடுக்கணுமாக்கா?' என்று தயங்கும் போதே, 'லூசு எடுத்துட்டு போ' என சொல்லி அனுப்பினாள்.

நோட்ஸை திறந்து பார்த்தபோ முதல் பக்கத்தில் பெயர் எழுதப்படாமல் புதிதாக இருந்தது. காரணம் கேட்டபோது, 'அடுத்தடுத்த நிறைய பேர் படிப்பாங்க. அதான் நான் பேரு எழுதல'னு அர்ச்சனா அக்கா சொல்லுச்சு. புத்தகத்த திருப்பி பார்க்கும் போது எங்கேயும் அடிக்கோடுகளே இல்லை. 

கிறுக்கல்கள் இல்லை. அந்த ஒன்பதாம் வகுப்பு நோட்ஸ கையில் வாங்கியபோது புது நோட்ஸ் வாங்கிய சந்தோசம் எனக்கு. அதே சந்தோசம் முருகாம்பாளுக்கும் இருக்கணுனு நானும் என் பேரை முதல் பக்கத்தில் எழுதாமல்  21வது பக்கத்தில் பென்சிலில் எழுதியிருந்தேன். இப்படியாக பன்னிரெண்டாவது வரை அர்ச்சனா அக்காவின் நோட்ஸில் தான் படித்தேன்.

நம்ம ஏரியால நீ தான்ல நல்ல வேலைக்கு போயிருக்க...
நம்ம ஏரியால நீ தான்ல நல்ல வேலைக்கு போயிருக்க...

அதன்பின் கல்லூரி செல்ல அர்ச்சனா அக்காவிடம் தொடர்பே இல்லாமல் போனது. அம்மாவிடம் சில ஆண்டுகள் கழித்து கேட்டபோது, 'அர்ச்சனா காதல் கல்யாணம் பண்ணிக்கிட்டு ஊர விட்டு போயிருச்சு'னு சொன்னாங்க.  பல வருடம் கழித்து கோயில் திருவிழாவில் அர்ச்சனா அக்காவைப் பார்த்தேன். அக்காவுடன் ஒரு பன்னிரெண்டு வயது மதிக்கத்தக்க சிறுவன் நின்று கொண்டிருந்தான். 'இது என் மகன். அவங்க அப்பா உடம்பு சரியில்லாம தவறிட்டாரு. சென்னையில இருந்து ஊருக்கு வந்துட்டேன். இங்க ஒரு ஜெராக்ஸ் கடையில வேலை பாக்குறேன். வேற எதாவது வேலை இருந்தாலும் சொல்லுல' என கண்ணீர் வடித்தது.

இப்படியான சூழலில் இருந்து சென்னை வந்ததால் என்னால முடிந்த உதவிகளை மற்றவர்களுக்கு செய்ய வேண்டும் என்று எப்போதும் எண்ணுவேன். ஆனால், சில நேரங்களில் சூழல் காரணமாக உதவ முடியாமலும் போகும். அப்படியானது தான் அந்த சாலை விபத்து. நான் பைக் வாங்கிய ஆரம்ப காலம் அது. அலுவலகத்தில் 10 மணிக்கு இருந்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் பைக் வாங்கினேன். வரும் வழியில் ஒருவர் வண்டியில் இருந்து கீழே விழுந்து அடிபட்டு கிடந்தார். அவரை சுற்றி சிலர் நின்று கொண்டிருந்தனர். ஆள்கள் நிற்கிறார்கள் என்பதால் நேரமாகிவிட்ட பரபரப்பில் நான் கிளம்பிவிட்டேன்.

ஆம்புலன்ஸ் வருவதற்குள்...
ஆம்புலன்ஸ் வருவதற்குள்...

மாலை வரும் வழியில் அந்த விபத்து பற்றி விசாரித்தபோது, ஆம்புலன்ஸ் வருவதற்குள் அந்த பெரியவர் இறந்துவிட்டார் என்று தகவல் சொன்னார்கள். உண்மையில் குற்ற உணர்வில் கூனிக் குறுகினேன்.

அந்த பெரியவரின் மரணத்திற்கு விபத்தை நிகழ்த்தியவர் காரணம் என்றால் சரியான நேரத்திற்கு உதவி செய்யாத நானும் காரணம் என மனம் பதைபதைத்தது. விதி இறந்துவிட்டார் என்று மற்றவர்கள் சமாதானம் செய்தாலும், அவரின் கடைசி நிமிட தேவைகளையாவது பூர்த்தி செய்திருக்கலாம் என்று எனக்கு என் மீதே கோபம். 

இரண்டு நாள்களாக என்னை நானே மன்னிக்க முடியவில்லை. மன உளைச்சலில் சுற்றித் திரிந்தேன். மூன்றாவது நாள் பைக்கை வீட்டில் விட்டு விட்டு ரயிலில் வந்தேன். காலை உணவை சாப்பிட மனதில்லாமல் ரயில் நிலையத்தில் இருந்த ஒரு வயதான தாத்தாவிடம் கொடுத்தேன். அவர் சிறிதும் தாமதிக்காமல் சாப்பிட ஆரம்பித்தார். சாப்பிட்டு முடித்து, 'நன்றிம்மா நேற்று மதியம் சாப்பிட்டது. பெருங்குடல, சிறுகுடல திங்கிற மாதிரி ஒரு வலி. யாராவது சாப்பாடு கொடுப்பாங்களானு காத்துட்டு இருந்தேன். சாமீ மாதிரி வந்த' என அந்த தாத்தா என் கைகளை தொட்ட நிமிடம் என்னை அறியாமல் கண்ணீர் வந்தது. நாம் வீண் செய்யும் ஒவ்வொரு பொருளுக்காகவும் யாரோ ஒருவர் ஏங்கிகொண்டு தான் இருக்கிறார் என்பது ஆழமாகப் பதிந்தது.

ஓடும் கால்களுக்கு மத்தியில்...
ஓடும் கால்களுக்கு மத்தியில்...

இந்த நிகழ்வுகளுக்குப் பின் நான் அலுவலக நேரம் பற்றியோ, என் மற்ற வேலைகள் பற்றியோ பெரிதாகக் கவலைப்படுவதில்லை. நிற்காமல் சுற்றும் கடிகார முள் கூட, தன்னுடன் மற்றொரு முள்ளையும் இணைத்தே சுற்றுகிறது. மனிதர்கள் மட்டும்தான் எல்லா இடங்களிலும் தம்மை முன் நிறுத்துகிறோம்.

உதவி செய்யும் போது கேமராவுடன் செல்பவர்களுக்கு உதவி வாங்குபவர்களின் இயலாமையும், கூச்சமும், வாழ்வின் வெறுமையும் என்றுமே புரியாது தான்.உதவி வாங்குபவர்கள் தன் இயலாமையை மறந்து சிரிப்புடன் வாங்கும் சூழலை எப்போதாவது உங்கள் கண்கள் ரசித்திருக்கிறதா... அது உலகின் ஆகச்சிறந்த நிமிடம். யாராலும் பரிசளிக்க முடியாத மகிழ்ச்சி. அளவிட முடியாத பரிசுத்தம். உதவி என்பது வீணாவதைக் கொடுப்பதல்ல, ஒருவரின் தேவையை பூர்த்தி செய்வது. 'உதவி' என்பது உதவி கேட்பவரின் இடத்திற்கு இறங்கி சரிசமமாக அமர்ந்து அவர்களின் இயலாமையைப் பகிர்ந்து கொள்வது.

கேமராவுடன் மனிதர்கள்
கேமராவுடன் மனிதர்கள்

ஒருவர் உங்களிடம் கேட்பது வழி, உணவு, உடை, என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். நின்று நிதானித்து அதைப் பூர்த்தி செய்து பாருங்கள் அன்றைய நாள் நிச்சயம் அழகாக இருக்கும். முடியவில்லை என்றால் உதாசீனம் செய்யாமல் விலகி செல்லுங்கள் தவறில்லை.

உங்களின் உதாசீனம் அவர்களின் உணர்வுகளை நிச்சயம் நொறுக்கிவிடும். அது இல்லாதவர்களிடம் இருந்து அவர்களிடம் மிச்சம் இருக்கும் உணர்ச்சிகளையும் நீங்கள் பறித்துக்கொள்வதற்கு சமம். நீங்கள் மற்றவரின் இயலாமையை அவதூறு செய்யாத வரை உங்களுக்குள் இருக்கும் மனிதன் மனிதனாகவே இருக்கிறான்.

அன்பு செய்வோம்.

சமூகத்தை கைகள் கோத்து கட்டமைப்போம்!

``அது எங்கம்மா தாங்க... என்னாச்சு அவங்களுக்கு?"- பதறிய மகள்; நிதானித்த நான்| ஒரு நாள் அனுபவம்

பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத திங்கட்கிழமை. எதையும், யாரையும் கண்டுகொள்ளாமல் டூ-வீலரை முறுக்கி அடையாறு பறந்தேன். 'உங்களின் பயம் புற்றுநோய் பற்றியதாக இருக்கக்கூடாது... காலதாமதத்தை பற்றியதாக இருக்க வேண்டும... மேலும் பார்க்க

`அம்மா... எந்திரிம்மா...' - திடீரென இறந்த தாய்; அப்பாவைக் காப்பாற்ற தேர்வெழுதிய மகள்

பட்டுக்கோட்டை அருகே உள்ள வெட்டுவாக்கோட்டை, ராமாபுரம் பகுதியைச் சேர்ந்த தம்பதி ராஜேந்திரன் - கலா. இவர்களின் மூன்றாவது மகள் காவியா (17). இவர் ஊரணிபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படி... மேலும் பார்க்க

நிறைவேறாத தந்தையின் ஆசை; கோவை டு சென்னை விமானத்தில் பறந்த முதியவர்கள்; நெகிழ்ச்சி சம்பவம்

திருப்பூரைச் சேர்ந்த பனியன் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் பாலன். சுல்தான்பேட்டையைச் சேர்ந்தவர். தன் தந்தையை விமானத்தில் அழைத்துச் செல்லவேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளார். ஆனால், அது நிறைவேறாமல் போனது. ... மேலும் பார்க்க

UPSC-ல் தேர்ச்சி பெற்றும் நிராகரிப்பு; 15 ஆண்டுகள் சட்டப்போராட்டம் நடத்தி வென்ற மாற்றுத்திறனாளி!

UPSC தேர்வில் தேர்ச்சிப்பெற்றும் பணி நியமனமின்றி நிராகரிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி, 15 வருட சட்டப் போராட்டத்துக்குப் பிறகு வெற்றி பெற்றிருக்கிறார். பார்வைக் குறைபாடுள்ள ஷிவம் குமார் ஸ்ரீவஸ்தவா, 2008-ம்... மேலும் பார்க்க

`அவர்கள் யாரையுமே எனக்குத் தெரியாது..' - 900 பேரின் மில்லியன் டாலர் கடனை அடைத்த ஹாலிவுட் நடிகர்!

இங்கிலாந்து தெற்கு வேல்ஸில் உள்ள டாடா ஸ்டீல் ஆலை கடந்த செப்டம்பர் மாதம் மூடப்பட்டது. இதனால், அந்த ஆலையில் பணிபுரிந்த கிட்டதட்ட 2,800 பேர் வேலையிழந்தனர். இதனால், ஆலை மூடலுக்கு பெரியளவில் எதிர்ப்பு எழுந... மேலும் பார்க்க