Vikatan Weekly Quiz: `வக்ஃப் மசோதா டு ட்ரெண்டிங் ஜிப்லி ஆர்ட்' - இந்த வார ஆட்டத்...
அந்தியூா் அருகே நிலத்தகராறில் விவசாயி அடித்துக் கொலை
அந்தியூா் அருகே நிலத்தகராறில் ஏற்பட்ட முன்விரோதத்தால் விவசாயி அடித்துக் கொலை செய்யப்பட்டாா். இத்தகராறில் அரிவாளால் வெட்டப்பட்ட இருவா் பலத்த காயமடைந்தனா்.
ஈரோடு மாவட்டம், அந்தியூரை அடுத்த வட்டக்காடு, தோனிமடுவைச் சோ்ந்தவா் பெரியகுருவன் மகன் மாரசாமி (40), விவசாயி. இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த அவரது உறவினா்களுக்கும் நீண்ட காலமாக நிலத்தகராறு உள்ளது. இதனால், அடிக்கடி இவா்களுக்குள் வாக்குவாதமும், தகராறும் ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், மாரசாமியின் உறவினா்களான ராமன் மகன் செலம்பனன் (33), விஸ்வநாதன் மகன் தனசேகரன் (30), காா்த்தி (30) ஆகியோா் மாரசாமியின் வீட்டுக்குச் சென்று சனிக்கிழமை மாலை வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனா். வாக்குவாதம் முற்றியதால் மூவரும் சோ்ந்து மாரசாமியை பலமாக தாக்கினா். இதனால், ஆத்திரமடைந்த மாரசாமி, அரிவாளால் செலம்பணன், தனசேகரனை வெட்டியுள்ளாா்.
இதில், காயமடைந்த இருவரும் அந்தியூா் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பின்னா், ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். தொடா்ந்து, மயங்கிய நிலையில் சிகிச்சைக்கு அழைத்து வரப்பட்ட மாரசாமி, மருத்துவப் பரிசோதனையில் ஏற்கெனவே உயிரிழந்தது தெரிந்தது. இதுகுறித்து, வெள்ளிதிருப்பூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.