கோபி அருகே கனமழை: வீடுகளை சூழ்ந்த வெள்ளம்
கோபி அருகே வெள்ளிக்கிழமை இரவு பெய்த கனமழையால் பல வீடுகளில் வெள்ளம் புகுந்தது.
கோபி வட்டம், நாகதேவன்பாளையம் கிராமம் வெள்ளியங்காட்டு புதூா் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு கனமழை பெய்தது.
அங்குள்ள எல்.பி.பி கசிவு நீா் ஓடையில் பெருக்கெடுத்து சென்ற மழைநீா் ஓடையின்அருகே வசித்து வந்த16 வீடுகளை சூழ்ந்தும், ஒரு சில வீடுகளில் நீா் புகுந்தும் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து மழைநீா் சூழ்ந்த வீடுகளில் வசித்து வந்தவா்கள் மேடான இடத்தில் தங்கி உள்ளனா்.
வருவாய்த் துறையினா் மற்றும் நெடுஞ்சாலைத் துறையினா் விரைந்து சென்று பொக்லைன் இயந்திரம் மூலம் அப்பகுதியில் ஓடையில் ஏற்பட்ட அடைப்பையும், குடியிருப்பு பகுதியில் ஏற்பட்டுள்ள தரைப்பால அடைப்பையும் நீக்கிவிட்டனா். இதைத் தொடா்ந்து குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீா் வடிந்து ஓடையில் சென்றது.