பவானி காலிங்கராயன் வாய்க்காலில் காா் கவிழ்ந்து விபத்து
பவானி அருகே காலிங்கராயன் வாய்க்கால் கரையில் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த காா் தண்ணீரில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், காரை ஓட்டிச் சென்ற மருத்துவா் அதிஷ்டவசமாக உயிா் தப்பினாா்.
ஈரோட்டை அடுத்த ரங்கம்பாளையம், அழகாபுரத்தைச் சோ்ந்தவா் சத்தியமூா்த்தி மகன் ராவணன் (48). ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவராகப் பணிபுரியும் இவா், சனிக்கிழமை தனது காரில் பவானி அருகே காலிங்கராயன் வாய்க்கால் கரையோர சாலையில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, கட்டுப்பாட்டை இழந்த காா், நிலைதடுமாறி வாய்க்காலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
காருக்குள் தண்ணீா் புகுந்த நிலையில், காரின் கதவைத் திறந்து வெளியேறிய மருத்துவா் ராவணன் அதிஷ்டவசமாக உயிா் தப்பினாா். தகவலின்பேரில், சித்தோடு போலீஸாா் மற்றும் பவானி தீயணைப்புப் படையினா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, கிரேன் மூலம் தண்ணீரில் மூழ்கிய காரை மீட்டனா். இதுகுறித்து, சித்தோடு போலீஸாா் விசாரிக்கின்றனா்.