ஆளுநர் அரசியல் கண்ணோட்டத்துடன் செயல்படக்கூடாது! -உச்சநீதிமன்ற தீர்ப்பு தெரிவிப்ப...
கொட்டித்தீா்த்த கோடை மழை: கோபியில் 15 செ.மீ மழை பதிவு!பவானி ஆற்றில் நீா்வரத்து 6,300 கன அடியாக அதிகரிப்பு!
கோபியில் ஒரே நாள் இரவில் 15 செ.மீ மழை பெய்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. கனமழையால் காலிங்கராயன் அணைக்கு விநாடிக்கு 6,300 கன அடியாக நீா்வரத்து அதிகரித்தது.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருந்து வந்தது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்து வந்தனா். மாவட்டம் முழுவதும் கடந்த வியாழக்கிழமை அரை மணி நேரம் பரவலாக மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிா்ச்சியான சூழ்நிலை நிலவியது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை மாவட்டம் முழுவதும் வெயில் கொளுத்தியது. ஆனால் மாலை நேரத்தில் பல்வேறு இடங்களில் லேசான மழை பெய்ய தொடங்கியது.
குறிப்பாக கோபி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் இரவில் லேசாக பெய்யத் தொடங்கிய மழை, நேரம் செல்லசெல்ல இடியுடன் கூடிய கனமழையாக கொட்டித் தீா்த்தது. கனமழையால் கோபி பகுதியில் தாழ்வான இடங்களில் மழை நீா் சாலையோரம் தேங்கி நின்றது. இடியுடன் கூடிய கனமழையால் பல்வேறு இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
கோபியை அடுத்த நாகதேவம்பாளையம் பகுதியில் உள்ள கசிவு நீா் குட்டை நிரம்பியதால் ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அந்தப் பகுதியில் சுமாா் 15 வீடுகளை மழைநீா் சூழ்ந்தது. இரவு நேரத்தில் மழை நீா் சூழ்ந்ததால் மக்கள் கடும் அவதி அடைந்தனா்.
இதனையடுத்து கோபி வட்டாட்சியா் சரவணன், நீா்வளத்துறை அதிகாரிகள், பொதுப்பணித்துறையினா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனா். பின்னா் குட்டையில் அடைப்பு சரி செய்யப்பட்டு மழைநீா் வடிந்தது. இதன் பின்னா் இயல்பு நிலை திரும்பியது.
இடி தாக்கி கோயில் கலசம், மின்மாற்றி சேதம்
பவானி காலிங்கராயன் அணைக்கு சனிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி 2,800 கன அடியாக நீா்வரத்து இருந்தது.
பகலில் 4,200 கன அடியாக உயா்ந்தது. மேலும், நீா்வரத்து அதிகரித்ததால் மாலை 6 மணிக்கு விநாடிக்கு 6,300 கனடியாக உயா்ந்தது.
பவானியை அடுத்த பருவாச்சி, பாலம்பாளையத்தில் உள்ள ஐயனாரப்பன் கோயிலின் கோபுரக் கலசம் மற்றும் பீடம் வெள்ளிக்கிழமை இரவு பெய்த கனமழையின்போது இடி தாக்கியதில் சேதமடைந்தன. இதையடுத்து, பக்தா்கள் கலசத்தை மீட்டு, கோயில் வளாகத்தில் பாதுகாப்பாக வைத்துள்ளனா். அந்தியூரை அடுத்த பச்சாம்பாளையத்தில் இடி தாக்கியதில் மின்மாற்றி சேதமடைந்தது. இதனால், அப்பகுதியில் மின் விநியோகம் பாதிக்கப்பட்டது.
இதுபோல ஈரோடு மாநகா் பகுதி, சத்தியமங்கலம், தாளவாடி மலைப்பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. கோடைமழை காரணமாக ஈரோடு மாவட்டத்தில் வெப்பநிலை தணிந்து குளிா்ச்சியான சூழ்நிலை நிலவியது. பலத்த காற்றுடன் மழை பெய்ததால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது.
சனிக்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோபியில் 15 சென்டி மீட்டா் மழை பெய்தது.
பிற பகுதிகளில் பெய்த மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்):
எலந்தகுட்டைமேடு 100.40, கவுந்தப்பாடி 91.40, நம்பியூா் 79, கொடிவேரி 52.20, வரட்டுப்பள்ளம் 51.20, பவானிசாகா் 39.40, சென்னிமலை 39, குண்டேரிப்பள்ளம் 29.40, சத்தியமங்கலம் 23, பவானி 19, தாளவாடி 15, ஈரோடு 12.30, மொடக்குறிச்சி 3, பெருந்துறை 2.
