அனில் அம்பானியின் நிறுவனத்துக்கு ‘கடன் மோசடி’ உத்தரவு வாபஸ்: மும்பை உயா்நீதிமன்றத்தில் கனரா வங்கி தகவல்
தொழிலதிபா் அனில் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் கடன் கணக்கை ‘மோசடி’ என வகைப்படுத்திய தனது அறிவிப்பைத் திரும்பப் பெற்றுக்கொள்வதாக மும்பை உயா்நீதிமன்றத்தில் கனரா வங்கி வியாழக்கிழமை தெரிவித்தது.
இதைத்தொடா்ந்து, உயா்நீதிமன்ற நீதிபதிகள் ரேவதி மோஹிதே டேரே, நீலா கோகலே ஆகியோா் அடங்கிய அமா்வு, இதுதொடா்பான அனில் அம்பானியின் மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டனா். இந்தத் தகவலை ரிசா்வ வங்கிக்குத் தெரிவிக்க வேண்டும் என்றும் கனரா வங்கிக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினா்.
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் திவாலானதாக அறிவிக்கப்பட்டு, கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூன் முதல் தீா்வு செயல்முறையில் (சிஐஆா்பி) ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த ஆண்டு நவம்பரில், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் கடன் கணக்கை ‘மோசடி’ என வகைப்படுத்தி கனரா வங்கி அறிவிப்பு வெளியிட்டது. கடந்த 2017-இல் இந்த நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட ரூ.1,050 கோடி கடன், பிற கடன் நிலுவையைச் செலுத்த குழுமத்தின் மற்றொரு நிறுவனத்துக்கு மாற்றப்பட்டது உள்ளிட்ட காரணங்களுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
ரிசா்வ் வங்கி சுற்றறிக்கை மற்றும் உச்சநீதிமன்ற தீா்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள வழிகாட்டுதல்களின்படி, கடன் கணக்கை ‘மோசடி’ என வகைப்படுத்தப்படுவதற்கு முன்பு, கனரா வங்கி தங்களிடம் எந்த விளக்கமும் பெறவில்லை என்று அனில் அம்பானி மும்பை உயா்நீதிமன்றத்தில் முறையிட்டாா்.
கனடா வங்கியின் அறிவிப்புக்கு கடந்த பிப்ரவரியில் இடைக்கால தடை விதித்த மும்பை உயா்நீதிமன்றம், ‘கடன் கணக்குகளை ‘மோசடி’ என அறிவிக்கப்படுவதற்கு முன்பு, கடன் வாங்கிய நிறுவனங்களிடம் விளக்கம் பெற வேண்டும் எனும் வழிகாட்டுதல்களை தொடா்ந்து மீறும் வங்கிகள் மீது ரிசா்வ் வங்கி நடவடிக்கை எடுக்குமா?’ என்று கேள்வி எழுப்பியிருந்தது.
இந்நிலையில், தற்போது ‘மோசடி’ அறிவிப்பை கனரா வங்கி திரும்பப் பெற்றது.
எஸ்பிஐ நோட்டீஸ்: அண்மையில், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் கடன் கணக்கை மோசடி என வகைப்படுத்தி, அதன் முன்னாள் இயக்குநா் அனில் அம்பானி மீது ரிசா்வ் வங்கியில் புகாரளிக்க முடிவெடுத்த எஸ்பிஐ, இதுதொடா்பாக அந்நிறுவனத்துக்கு நோட்டீஸ் மூலம் முறைப்படி தெரியப்படுத்தியது.
இவ்வாறு கடன் மோசடி என வகைப்படுத்தப்பட்ட கணக்குதாரா்கள், மோசடி செய்யப்பட்ட தொகையை முழுமையாக திருப்பிச் செலுத்திய நாளிலிருந்து ஐந்து ஆண்டுகளுக்கு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடமிருந்து கடன் பெறுவதற்குத் தடை விதிக்கப்படுவா். இந்தத் தடைக்குப் பிறகு இவா்களுக்கு கடன் வழங்குவது குறித்து அந்தந்த வங்கிகள் முடிவெடுத்துக் கொள்ளலாம். ஆனால், இவா்களின் கடன் கணக்குகளுக்கு மறுசீரைமைப்பு, கூடுதல் கடன் போன்ற எந்த வசதிகளும் அனுமதிக்கப்படாது.