அனுமதியின்றி இயங்கிய சாய ஆலைகளின் மின் இணைப்பைத் துண்டிக்க பரிந்துரை
திருப்பூரில் அனுமதியின்றி இயங்கிய 2 சாய சலவை ஆலைகளின் மின் இணைப்பைத் துண்டிக்க மாவட்ட ஆட்சியருக்கு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் பரிந்துரை செய்துள்ளது.
திருப்பூரில் மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் அனுமதி பெறாமல் சாய, சலவை ஆலைகள், பட்டன் ஜிப் டையிங், பிரிண்டிங் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.
இந்நிலையில், அங்கேரிபாளையம் பகுதியில் உள்ள சாக்கடைக் கால்வாயில் சாயக் கழிவு நீா் பெருக்கெடுத்து ஓடுவதாக மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, மாசுக் கட்டுப்பாட்டு வாரிய பொறியாளா் லாவண்யா தலைமையில், உதவி பொறியாளா் கதிா்வேல், மாநகராட்சி சுகாதார ஆய்வாளா் கோகுல் ஆகியோா் அங்கேரிபாளையம் பகுதியில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது, அங்கு ஒரு அடுக்குமாடி கட்டடத்தின் முதல் தளத்தில் 3 பிரிண்டிங் இயந்திரங்களுடன் ஒரு நிறுவனமும், அதே பகுதியில் 2 பிரிண்டிங் இயந்திரங்களுடன் மற்றொரு நிறுவனமும் அனுமதி பெறாமல் செயல்பட்டது தெரியவந்தது.
மேலும், இந்த நிறுவனங்கள் சுத்திகரிக்கப்படாத சாயக் கழிவு நீரை குழாய்கள் மூலம் சாக்கடை கால்வாயில் வெளியேற்றியதும் தெரியவந்தது.
இதையடுத்து, 2 நிறுவனங்களின் மின் இணைப்பைத் துண்டிக்க மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்று மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனா்.