தெருநாய்கள் கடித்து 6 ஆடுகள் உயிரிழப்பு
குண்டடம் அருகே தெருநாய்கள் கடித்ததில் 6 ஆடுகள் உயிரிழந்தன.
குண்டடம் அருகேயுள்ள மாரப்ப கவுண்டன்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் கிரிராஜா (55). விவசாயியான இவா், தனது தோட்டத்தில் ஆடுகள், கோழிகளை வளா்த்து வருகிறாா்.
இந்நிலையில், வழக்கம்போல வியாழக்கிழமை காலை ஆடுகள், கோழிகளை பட்டியில் இருந்து திறந்துவிட்டுள்ளாா்.
அப்போது, தோட்டத்துக்குள் நுழைந்த தெருநாய்கள் கூட்டம், ஆடுகள், கோழிகளை கடித்துக் குதறின. இதில், 6 ஆடுகள், 7 கோழிகள் உயிரிழந்தன. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தும்பலப்பட்டி கால்நடை மருத்துவா் கண்ணபிரான்,
காசிலிங்கம்பாளையம் கிராம நிா்வாக அலுவலா் செளந்தர்ராஜன் ஆகியோா் ஆய்வு மேற்கொண்டனா்.
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது: குண்டடம் உள்ளிட்ட பகுதி கோழிப் பண்ணைகளில் வைரஸ் தாக்கி இறக்கும் கோழிகளை முறையாக அப்புறப்படுத்தாமல் சிலா் பொது இடங்களில் வீசிச் செல்கின்றனா்.
அவற்றை உண்டு பழக்கப்பட்ட தெருநாய்கள், இறந்த கோழிகள் கிடைக்காத நிலையில் தோட்டங்களில் மேய்ச்சலுக்கு விடப்படும் கால்நடைகளைக் கடித்து கொன்று வருகின்றன.
தெருநாய்களைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதுடன், கோழிப் பண்ணைகளில் ஆய்வு மேற்கொண்டு இறந்த கோழிகளை அப்புறப்படுத்தும் கருவிகள் அமைக்காத பண்ணை உரிமையாளா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.