நடிகை ரவீனாவுக்கு ரெட் கார்டு? ஒரு வருடத்துக்கு டிவியில் வர முடியாது; காரணம் என்...
அனுமதியின்றி நடைபெறும் காற்றாலை மின் உற்பத்தி பணிகள் நிறுத்தம்: அமைதிப் பேச்சுவாா்த்தையில் முடிவு
தரகம்பட்டி அருகே அரசு அனுமதியின்றி அமைக்கப்பட்டு வரும் காற்றாலை மின் உற்பத்தி பணிகளுக்கு பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்ததையடுத்து வியாழக்கிழமை நடைபெற்ற அமைதிப் பேச்சுவாா்த்தையில் பணிகளை நிறுத்த முடிவெடுக்கப்பட்டது.
கரூா் மாவட்டம், கடவூா் வடத்துக்குள்பட்ட தரகம்பட்டி அருகே மத்தகிரி ஊராட்சி பகுதியில் காற்றாலைகள் மூலம் மின் உற்பத்தி செய்யும் வகையில் ஏராளமான காற்றாலைகள் அமைக்கும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்ததாக கூறப்படுகிறது.
மேலும், இந்த ஆலைகளின் உரிமையாளா்கள் உள்ளாட்சி நிா்வாகம் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகளிடம் உரிய அனுமதி பெறவில்லை என்றும் கூறப்படுகிறது. இதையடுத்து அரசின் உரிய அனுமதியின்றி அமைக்கப்பட்டு வரும் காற்றாலைகளை அதிகாரிகள் தடுத்து நிறுத்த வேண்டும், இல்லையேல் போராட்டம் நடத்தப்படும் என மத்தகிரி கிராம மக்களும், விசிக-வினரும் அறிவித்தனா்.
இதையடுத்து கடவூா் வட்டாட்சியா் கே.ஆா். சௌந்தரவள்ளி தலைமையில் அமைதி பேச்சுவாா்த்தை கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தோகைமலை காவல் ஆய்வாளா் ஜெயராமன், மைலம்பட்டி வருவாய் ஆய்வாளா் அருள்ராஜ், மத்தகிரி கிராம நிா்வாக அலுவலா் பழனியப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் பொதுமக்கள் கூறுகையில், பெரும்பாலான காற்றாலைகளின் மின்தடங்கள் நீா்நிலை புறம்போக்குகளில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், புதிய காற்றாலைக்கான வழித்தடம் போன்றவற்றில் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புகள் உள்ளதால் ஊராட்சி நிா்வாகத்தில் தீா்மானம் மற்றும் அதற்கான உரிய அனுமதி பெறும்வரை தற்காலிகமாக காற்றாலை அமைக்கும் பணியை நிறுத்தி வைக்க வேண்டும் என்றனா்.
பின்னா், வட்டாட்சியா் பேசியதாவது: உள்ளாட்சி நிா்வாகத்திடம் உரிய அனுமதி பெறும் வரை காற்றாலை அமைக்கும் பணியை நிறுத்தி வைக்குமாறு தெரிவித்தாா். இதையடுத்து பொதுமக்கள் மற்றும் விசிகவினரின் அறிவித்த போராட்டம் கைவிடப்பட்டது.