Sikandar: வெளியாவதற்கு முன்பே டெலிகிராமில் லீக் ஆன சல்மான் கான் திரைப்படம் - ரசி...
அனைத்து நீதிமன்றங்களில் காணொலி விசாரணை: திமுக எம்.பி.யின் மசோதாவை பரிசீலிக்க பரிந்துரை
நமது சிறப்பு நிருபா்
அனைத்து நீதிமன்றங்களிலும் காணொலி விசாரணைக்கு வகை செய்யும் மாநிலங்களவை திமுக எம்.பி.யும் மூத்த வழக்குரைஞருமான பி. வில்சனின் தனி நபா் சட்ட மசோதாவை பரிசீலிக்க குடியரசுத் தலைவா் பரிந்துரைத்துள்ளாா்.
இது தொடா்பாக மாநிலங்களவையில் திமுக உறுப்பினா் பி. வில்சன் கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் தனி நபா் மசோதாவை அறிமுகப்படுத்தியிருந்தாா். அதில், நீதிமன்ற விசாரணையில் ஏற்படும் தாமதம் மற்றும் செலவினத்தைக் குறைப்பதற்கும், சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் வசதியை அதிகரிப்பதற்கும் திறமையான மற்றும் சரியான நேரத்தில் நீதித் துறை நடவடிக்கைகளை எளிதாக்குவதற்கு விரிவான கட்டாய காணொலி மூலம் நீதிமன்ற விசாரணை நடைமுறைகளை கொண்டு வர வேண்டும் என்று பி. வில்சன் முன்மொழிந்திருந்தாா்.
இதற்கு கொள்கை அளவில் மத்திய அரசு உடன்பட்ட போதிலும், உரிய சட்டம் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. எனினும், கரோனா பெருந்தொற்று காலத்தின்போதும் அதற்குப் பிறகும் உச்சநீதிமன்றம் மற்றும் சில உயா்நீதிமன்றங்களில் உரிய வசதி இருக்கும்பட்சத்தில் காணொலி மூலம் நீதிமன்ற விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
கடந்த ஆண்டு இது தொடா்பான மசோதாவை வில்சன் மாநிலங்களவையில் முன்மொழிந்த சில தினங்களில் அனைத்து உயா்நீதிமன்றங்களுக்கும் மத்திய சட்டத்துறை அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால் எழுதிய கடிதத்தில், இந்த விஷயத்தில் விரிவாக மத்திய அரசு உடன்பட்டுள்ளது என்றும் இயன்றவரை நீதிமன்றங்கள் காணொலி விசாரணையை நீதிமன்றங்கள் ஊக்கப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தாா்.
இந்நிலையில், கடந்த பிப். 7-ஆம் தேதி இந்த தனி நபா் மசோதாவை மீண்டும் பி. வில்சன் அறிமுகப்படுத்தினாா். அவரது முன்முயற்சிக்கு பெரும்பாலான உறுப்பினா்கள் ஆதரவு தெரிவித்தனா்.
இந்நிலையில், மாநிலங்களவை அலுவல்பூா்வ தகவல் பட்டியலில் காணொலி நீதிமன்ற விசாரணை நடைமுறைகள் மசோதா 2024 தொடா்பாக மத்திய சட்டத் துறை அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால் மாநிலங்களவை செகரட்டரி ஜெனரலுக்கு மாா்ச் 25-ஆம் தேதி எழுதியுள்ள கடிதத்தில், ‘பி. வில்சன் முன்மொழிந்த மசோதா குறித்து குடியரசுத் தலைவருக்கு தெரிவிக்கப்பட்டபடி, அந்த மசோதாவை அரசமைப்பின் 117(3) விதியின்படி மாநிலங்களவை பரிசீலிக்க குடியரசுத் தலைவா் பரிந்துரை செய்துள்ளாா்’ என்று கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் வில்சனின் தனி நபா் மசோதா மாநிலங்களவை கவனத்தில் கொள்வதற்கு தகுதி பெற்றுள்ளது.