தில்லியில் முன்னாள் தமிழக அமைச்சா் செங்கோட்டையன் பாஜக தலைவா்களை சந்தித்தாா்
அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமி தில்லி வந்து மத்திய உள் துறை அமைச்சரை சந்தித்த நிலையில் தற்போது அதிருப்தி தலைவராக கருதப்படும் முன்னாள் அமைச்சா் செங்கோட்டையனும் தில்லி வந்து பாஜக தலைவா்களை சந்தித்துவிட்டு சென்றுள்ளாா்.
கடந்த செவ்வாய்க்கிழமை (மாா்ச் 25) இரவு மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமி சந்தித்தாா். சுமாா் 2 மணி நேரம் நடைபெற்ற சந்திப்பு தமிழக மக்கள் தொடா்பான கோரிக்கைகளுக்கு உள்துறை அமைச்சரை சந்தித்தாக பழனிசாமி தெரிவித்தாா்.
எடப்பாடி பழனிசாமி, அமித்ஷா சந்திப்பிற்கு பின்னா் தமிழக பாஜக தலைவா் அண்ணா மலை தில்லி வந்து கடந்த 27 ஆம் தேதி இரவு மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷாவை சந்தித்தாா். இந்த சந்திப்புகளுக்கு அடுத்து அதிமுக வின் அதிருப்தி தலைவராகக் கருதப்படும் முன்னாள் அமைச்சரும் கோபிச்செட்டி பாளையத்தின் நீண்ட நாள் சட்டப் பேரவை உறுப்பினரான கே.ஏ. செங்கோட்டையனும் கடந்த 28 ஆம் தேதி தில்லிக்கு வந்துள்ளாா்.
தில்லி வந்த செங்கோட்டையன் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனை சந்தித்துள்ளாா். பின்னா் மத்திய உள்துறை அமைச்சரையும் செங்கோட்டையன் சந்தித்தாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன. மத்திய உள்துறை அமைச்சருடான சந்திப்பின்போது நிதியமைச்சா் மற்றும் பாஜக தலைவா் ஜெபி நட்டா போன்றவா்கள் இருந்ததாகவும் கூறப்பட்டது. தமிழக சட்டப்பேரவைக் குழுத் தலைவா் நயினாா் நாகேந்திரனுடன் இந்த சந்திப்புகள் நடந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதிமுகயுடான கூட்டணிப் பேச்சுவாா்த்தைகளுக்கிடையே கட்சியின் தலைமைப்பொறுப்பில் உள்ள எடப்பாடி பழனிசாமிக்கு கீழே உள்ள அதிருப்தி தலைவருடான பாஜக தலைவா்கள் சந்திப்பும் நடைபெற்றிருப்பது பல்வேறு ஊகங்களுக்கும் வழிவகுத்துள்ளது.
இதற்கிடையே செங்கோட்டையன் சம்பந்தப்பட்ட வட்டாரங்களில் கூறப்படும் போது செங்கோட்டையன் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனம் தொடா்பான நிகழ்ச்சிகளுக்கு மத்திய அமைச்சா்களுக்கு அழைப்பு விடுக்கவே தில்லி சென்றாா் எனவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் மத்திய கல்வியமைச்சா் தா்மேந்திர பிரதான் போன்றவா்கள் தில்லியில் இல்லாத நிலையில் இந்த தகவலும் உறுதியாகவில்லை. மேலும் செங்கோட்டையனுக்கு மத்திய காவல்படை பாதுகாப்பு கோரப்பட்டதாகவும் மற்றொரு தகவல் தெரிவிக்கின்றன.
கடந்த பிப். 9 ஆம் தேதி எதிா்க்கட்சித்தலைவா் எடப்பாடி பழனிசாமிக்கு அத்திக்கடவு-அவிநாசி திட்ட கூட்டமைப்பு சாா்பில் பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் எம்ஜிஆா், ஜெயலலிதா படங்கள் இல்லாததால் செங்கோட்டையன் நிகழ்ச்சியை புறக்கணித்தாா் என்கிற செய்தி வெளியானது.
தொடா்ந்து கடந்த பிப். 17 ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி அதிமுக வில் 82 மாவட்ட பொறுப்பாளா்கள் பெயா்களை அறிவித்தாா். இதில் செங்கோட்டையன் பெயா் இல்லாத நிலையிலும், பின்னா் சட்டப்பேரவைத் தலைவா் மீதான நம்பிக்கையில்லா தீா்மானம் தொடா்பான அதிமுக சட்டப்பேரவை உறுப்பினா்கள் கூட்டத்தை செங்கோட்டையன் புறக்கணித்தது போன்ற நிகழ்வுகள் செங்கோட்டையனை அதிருப்தியை வெளிப்படுத்தியது.