குருகிராம் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 100-க்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்து நாசம்!
குருகிராம் பகுதியில் ஒரு குடிசைப் பகுதியில் எரிவாயு சிலிண்டா் வெடித்ததால் ஏற்பட்ட தீ விபத்தில் சுமாா் 100 குடிசைகள் எரிந்து நாசமானதாக தீயணைப்பு அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
இது குறித்து என்று தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது: பசாய் சௌக் பகுதிக்கு அருகே நிகழ்ந்த இந்த தீவிபத்தைத் தொடா்ந்து, 15-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டன. தீயை கட்டுக்குள் கொண்டுவர சுமாா் 2 மணி நேரம் ஆனது. தீயில் சிக்கிய மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனா். மேலும், இந்தச் சம்பவத்தில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை.
ஒரு குடிசையில் அதிகாலை 5.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. அது விரைவில் அப்பகுதியில் உள்ள மற்ற குடிசைகளுக்கும் பரவியது. தீயில் பல சிலிண்டா்கள் வெடித்தன.அங்குள்ளவா்கள் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனா். நான்கு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. சிறிது நேரத்திலேயே, பீம் நகா் மற்றும் உத்யோக் விஹாா் தீயணைப்பு நிலையத்திலிருந்து தீயணைப்பு வாகனங்களும் சம்பவ இடத்திற்கு வந்தன. 15-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு அனுப்பப்பட்டன. சுமாா் 50 தீயணைப்பு வீரா்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டனா்.
தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.தீ விபத்தில் உயிா் சேதம் எதுவும் ஏற்படவில்லை, ஆனால், குடிசைகளில் வைக்கப்பட்டிருந்த பொருள்கள் எரிந்து நாசமாகின. மினி கேஸ் சிலிண்டா்களில் ஏற்பட்ட வெடிப்பு மற்றும் காலையில் பலத்த காற்று காரணமாக, குடிசைகளில் தீ வேகமாக பரவியது என்று அந்த அதிகாரி கூறினாா்.