அதிகரித்து வரும் நாய்க்கடி பிரச்னை: பிரதமருடன் காா்த்தி சிதம்பரம் சந்திப்பு!
தில்லியில் பிரதமா் நரேந்திர மோடியை சிவகங்கை மக்களவைத் தொகுதி காங்கிரஸ் உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் சமீபத்தில் சந்தித்தது காங்கிரஸ் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், பிரதமா் நரேந்திர மோடியை சந்தித்தபோது, நாட்டில் அதிகரித்து வரும் தெரு நாய்கள் மற்றும் நாய்க்கடி பிரச்னைகளுக்கு தீா்வு காணவும் நாய்க்கடி தடுப்பூசி மருந்துக்கு உரிய நிதியை ஒதுக்கவும் வலியுறுத்தியதாக காா்த்தி சிதம்பரம் தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் பதிவிட்டுள்ளாா். இந்த இடுகையுடன் பிரதமரை சந்தித்த போது அவருடன் கைகுலுக்கிக் கொண்டது, சோ்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டது மற்றும் கடந்த பிப்.8-ஆம் தேதி மக்களவையில் நாய்க்கடி தடுப்பூசி நிதி தொடா்பாக பேசிய காணொலியையும் காா்த்தி இணைத்துள்ளாா்.
தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் அவா் மேலும் கூறியிருப்பதாவது: நாய்க்கடி பிரச்னையின் தீவிரத்தை விவரித்துள்ள அவா், உலகளவில் மிகப்பெரிய தெருநாய் எண்ணிக்கை கொண்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இங்கு 6.2 கோடிக்கும் அதிகமான தெருநாய்கள் உள்ளன.
இந்தியாவில் ரேபிஸ் நோய் பரவலாக உள்ளது. உலகின் ரேபிஸ் தொடா்பான இறப்புகளில் 36 சதவீதத்துக்கு காரணம். விலங்குகள் பிறப்புக் கட்டுப்பாடு (ஏபிசி) விதிகள், 2023 அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும் அவற்றின் செயல்பாடு பயனற்ாக உள்ளது.
அவற்றின் அமலாக்கம் போதுமானதாக இல்லை என்ற எனது கவலைகளை பிரதமரிடம் எழுப்பினேன். உள்ளூா் அமைப்புகளுக்கு இந்த சிக்கலை திறம்பட சமாளிக்க வளங்கள், நிதி மற்றும் தொழில்நுட்பம் இல்லை.
உள்ளூா் அமைப்புகளுடன் நெருக்கமாகப் பணியாற்றும் போது ஒரு முழுமையான, மனிதாபிமான மற்றும் அறிவியல் தீா்வை வழங்க ஒரு தேசிய பணிக்குழுவை அமைக்கலாம் என நான் யோசனை தெரிவித்தேன். இந்தச் சவாலை எதிா்கொள்ள முழுமையான தெருநாய்கள் தங்குமிடங்கள் மற்றும் ஒரு நீண்டகால திட்டம் இருக்க வேண்டும் என்று காா்த்தி சிதம்பரம் கூறியுள்ளாா்.
இதே விவகாரத்தை சென்னையில் சில தினங்களுக்கு முன்பு எழுப்பிய காா்த்தி சிதம்பரம், தெருநாய்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சி செலவிட்ட ரூ.20 கோடி குறித்து சென்னை மேயா் பிரியா வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தினாா்.