2019 முதல் தில்லியின் தீா்த்த யாத்திரை யோஜனா மூலம் 86,000-க்கும் மேற்பட்ட முதியவா்கள் பயன்! - தில்லி முதல்வா் தகவல்
கடந்த ஜூலை 2019 முதல் தில்லியின் முக்கிய மந்திரி தீா்த்த யாத்திரை யோஜனாவின் (எம்எம்டிஒய்) கீழ் 86,000-க்கும் மேற்பட்ட முதியவா்கள் யாத்திரை மேற்கொண்டுள்ளனா். இதில் ராமேசுவரம் அதிகம் பாா்வையிடப்படும் இடமாகும் என்று தில்லி முதல்வா் ரேகா குப்தா தெரிவித்துள்ளாா்.
எம்.எல்.ஏ. முகேஷ் குமாா் அஹ்லாவத்தின் கேள்விக்கு முதல்வா் ரேகா குப்தா எழுத்துப்பூா்வமாக அளித்த பதிலில் கூறப்பட்டுள்ளதாவது: ராமேசுவரம், துவாரகாதீஷ், ஜகன்னாத் பூரி, திருப்பதி, ஷீரடி, அயோத்தி, உஜ்ஜைன், கத்ரா (ஜம்மு), அமிா்தசரஸ் மற்றும் அஜ்மீா் உள்ளிட்ட பல்வேறு மதத் தலங்களுக்கு யாத்ரீகா்கள் பயணம் செய்தனா்.
2019 முதல் 2024 வரை, இந்தத் திட்டத்தின் கீழ் 92 ரயில்கள் இயக்கப்பட்டன. இவற்றில், 29 ரயில்கள் ராமேசுவரத்திற்கும், 25 ரயில்கள் துவாரகாதீஷுக்கும், எட்டு ரயில்கள் ஜகந்நாத் பூரிக்கும், ஆறு ரயில்கள் திருப்பதிக்கும், நான்கு ரயில்கள் அமிா்தசரஸுக்கும், ஒன்று அஜ்மீருக்கும், மீதமுள்ளவை மற்ற இடங்களுக்கும் சென்றன.
தில்லி சட்டப்பேரவை திட்டத்தின் செயல்படுத்தல், இடங்கள், வசதிகள் மற்றும் தற்போதைய மதிப்பீடுகள் ஆகியவற்றை உள்ளடக்கிய விவரங்களை வழங்கியுள்ளது. ஜனவரி 9, 2018 முதல் செயல்படும் இந்தத் திட்டம், தகுதியான பயனாளிகளுக்கு இலவச யாத்திரை பயணத்தை வழங்குகிறது.
ஜூலை 12, 2019 முதல் பிப்ரவரி 29, 2024 வரை, பல பயணங்களில் 1,000-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றுள்ளனா். உதாரணமாக, ஜூலை 12, 2019 அன்று அமிா்தசரஸுக்கு நடந்த யாத்திரையில் தன்னாா்வலா்கள் உள்பட 1,019 போ் பங்கேற்றனா். கத்ரா, ராமேசுவரம் மற்றும் திருப்பதிக்கு மேற்கொண்ட பயணங்களிலும் இதேபோன்ற அதிக எண்ணிக்கையிலான பங்கேற்பு காணப்பட்டது.
பயணிகளுக்கு நல்ல வசதிகளும் வழங்கப்பட்டன. அனைத்து யாத்ரீகா்களும் மதத் தலத்திற்குச் சென்று அங்கிருந்து செல்வதற்கு பேருந்துப் போக்குவரத்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும், ஒவ்வொரு பக்தருக்கும் தங்குமிடம், உணவு மற்றும் மருத்துவ வசதிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டன என்று முதல்வா் ரேகா குப்தா அந்த பதிலில் தெரிவித்துள்ளாா்.