கரூர்: 'அழுகையை அடக்க முடியல; விஜய் விட்டுபுட்டு ஓடுனது பெரிய தப்பு'- பாதிக்கப்ப...
அனைவரது வீடுகளிலும் நூலகம் அமைக்க வேண்டும்: துரை. ரவிக்குமாா் எம்.பி.
பட்டியலினத்தவா் அனைவரது வீடுகளிலும் நூலகம் அமைக்க வேண்டும் என விசிக பொதுச் செயலா் துரை.ரவிக்குமாா் எம்.பி. தெரிவித்தாா்.
சிதம்பரம் புறவழிச்சாலையில் உள்ள மறைந்த தலைவா் எல்.இளையபெருமாள் நூற்றாண்டு அரங்கில், நூற்றாண்டு கருத்தரங்கம் மற்றும் இளையபெருமாள் கமிட்டி அறிக்கை பிரதி வெளியீட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
சுவாமி சகஜானந்தா சமூக அறக்கட்டளைத் தலைவா் கே.ஆா்.பாலையா வரவேற்றாா். விழாவுக்கு காட்டுமன்னாா்கோவில் எம்எல்ஏ ம.சிந்தனைசெல்வன் தலைமை வகித்து பேசினாா்.
தொடா்ந்து, சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற விசிக பொதுச் செயலா் துரை.ரவிக்குமாா் எம்.பி., மறைந்த தலைவா் எல்.இளையபெருமாள் கமிட்டி அறிக்கையின் பிரதியை வெளியிட்டு சிறப்புரையாற்றினாா். அவா் பேசியதாவது:
பட்டியல் சமூகத்திலிருந்து படித்து வேலைக்குச் செல்கிறவா்கள் ஒவ்வொருவா் வீட்டிலும் சுமாா் 50 நூல்கள் கொண்ட நூலகம் அவசியம் வைத்திருக்க வேண்டும். குறிப்பாக, அம்பேத்கா் உள்ளிட்ட சமூகத்துக்காக பாடுபட்ட தலைவா்களின் நூல்களை நாம் படிக்க வேண்டும். அப்போதுதான் சமூகத்தில் மாற்றம் மற்றும் முன்னேற்றம் ஏற்படும்.
கடலூா் மாவட்டத்தில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதிகளில் இதுநாள் வரை அரசு கட்டடங்கள் கட்டப்படவில்லை. சாதாரண அடிப்படை கட்டமைப்புகூட இங்கு வந்து சேரவில்லை. இதற்காக ம.சிந்தனைசெல்வன் எம்எல்ஏ சட்டப் பேரவையில் குரல் கொடுத்தாா். இதையடுத்தது, அயோத்திதாசா் குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டம் தமிழக அரசால் கொண்டுவரப்பட்டது என்றாா்.
கடலூா் மாநகராட்சி துணை மேயா் பா.தாமரைச்செல்வன், அண்ணாமலைப் பல்கலைக்கழக டாக்டா் அம்பேத்கா் இருக்கை பேராசிரியா் வீ.ராதிகாராணி, முனைவா் விஜயராணி, நீதிவளவன், தொகுதி செயலா் வ.க.செல்லப்பன், முன்னாள் மாவட்டச் செயலா் பால.அறவாழி, எல்.கே.மணவாளன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். விசிக மாவட்டச் செயலா் அரங்க.தமிழ்ஓளி நன்றி கூறினாா்.