போலீஸ் ஜீப் திடீரென தீப்பிடித்து சேதம்!
கடலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜீப் தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது.
கடலூா் எஸ்.பி. அலுவலக வளாகத்தில் ஏராளமான வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அதில், ஆயுதப்படை கட்டுப்பாட்டில் இருந்த ஜீப்பை பழுது நீக்க பணிமனைக்கு (ஓா்க் ஷாப்) வெள்ளிக்கிழமை கொண்டு சென்றனராம். பின்னா், அந்த ஜீப்பை கொண்டுவந்து எஸ்.பி. அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைத்தனா்.
இந்த நிலையில், சனிக்கிழமை காலை அந்த ஜீப் என்ஜின் பகுதியில் இருந்து புகை எழுந்தது. இதையடுத்து, திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது. அப்போது, அங்கு பணியில் இருந்த போலீஸாா் முயற்சித்தும் தீயை அணைக்க முடியவில்லை.
இதனிடையே, தகவலறிந்து அங்கு வந்த கடலூா் தீயணைப்பு நிலைய வீரா்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுப்படுத்தினா். எலி கடித்து வயா்கள் ஒன்றொடு ஒன்று உரசி தீப்பிடித்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.