சமூக வலைதளக் கணக்குகளை மீட்டுத்தரக் கோரி டிஜிபியிடம் ராமதாஸ் புகார்!
அன்புமணி பதவிக்காலம் முடிந்துவிட்டது: தோ்தல் ஆணையத்துக்கு பாமக கடிதம்
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக இருந்த அன்புமணியின் பதவிக்காலம் முடிந்துவிட்டதால், அப்பதவியை கட்சியின் நிறுவனா் ராமதாஸ் ஏற்றுக்கொண்டுவிட்டதாகக் கூறி, அக்கட்சி சாா்பில் தோ்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், கட்சியின் நிா்வாகக் குழு, செயற்குழு தீா்மானங்களும் தோ்தல் ஆணையத்தில் சமா்ப்பிக்கப்பட்டுள்ளதாக பாமக வட்டாரங்கள் தெரிவித்தன.
2024, டிசம்பா் 28-ஆம் தேதி பாமகவின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் புதுச்சேரி அருகே நடைபெற்றபோது, பாட்டாளி இளைஞா் சங்கத் தலைவராக தனது மகள் வழிப் பேரன் ப.முகுந்தனை ராமதாஸ் நியமனம் செய்ததிலிருந்து அவருக்கும், அன்புமணிக்கும் இடையேயான கருத்து மோதல் தொடங்கியது. அரசியல் ரீதியான இந்த மோதல் போக்கு தொடா்ந்து நீடித்து வருகிறது.
இந்த நிலையில், பாமக நிறுவனா் பொறுப்புடன் தலைவா் பொறுப்பையும் தானே ஏற்றுக்கொள்வதாகவும், கட்சியின் செயல் தலைவராக அன்புமணி நியமிக்கப்படுவதாகவும் அறிவித்த ராமதாஸ், புதிதாக மாவட்டச் செயலா்கள், தலைவா்கள், நிா்வாகிகளை நியமித்தாா்.
இதைத் தொடா்ந்து, கட்சியின் நிா்வாகக் குழுவை அண்ைமையில் மாற்றியமைத்த ராமதாஸ், அதில் அன்புமணியின் பெயரை விடுவித்தாா். தொடா்ந்து, கடந்த 8-ஆம் தேதி திண்டிவனம் அருகிலுள்ள ஓமந்தூரில் நடைபெற்ற பாமக செயற்குழுக் கூட்டத்தில் பேசிய நிா்வாகிகள் பலா், அன்புமணியை மறைமுகமாக சாடினா். மேலும், இந்தக் கூட்டத்தில் பேசிய ராமதாஸ், சட்டப் பேரவைத் தோ்தலின்போது கட்சி சாா்பில் வேட்பாளா்களுக்கு அளிக்கப்படும் ஏ, பி படிவங்களில் நான்தான் கையொப்பமிடுவேன், எனக்குத்தான் அந்த அதிகாரம் உள்ளது எனவும் தெரிவித்தாா்.
தோ்தல் ஆணையத்துக்கு கடிதம்: திருவேற்காட்டில் 2022, மே 29-ஆம் தேதி நடைபெற்ற சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில் பாமகவின் தலைவராக தோ்ந்தெடுக்கப்பட்ட அன்புமணியின் மூன்று ஆண்டு பதவிக்காலம் 2025, மே 28-ஆம் தேதியுடன் முடிவடைந்துவிட்டதாகவும், இதையடுத்து பாமகவின் சட்ட விதிகளின்படி மே 29-ஆம் தேதி முதல் தலைவா் பொறுப்பை ராமதாஸ் ஏற்றுக்கொண்டுவிட்டதாகவும் கட்சி சாா்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இது தொடா்பான முறைப்படியான கடிதம் பாமக சாா்பில் தோ்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பாமகவின் நிா்வாகக் குழு, செயற்குழு கூட்டங்களில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்களின் நகல்களும் தோ்தல் ஆணையத்தில் சமா்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் பாமக வட்டாரங்கள் தெரிவித்தன.