அபராதத் தொகையில் முறைகேடு: காவலா் பணியிடை நீக்கம்
திருவாரூா் பகுதியில் போக்குவரத்து விதிமீறல் தொடா்பாக வசூலித்த அபராதத் தொகையை நீதிமன்றத்தில் செலுத்தாமல் முறைகேடு செய்த காவலா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.
திருத்துறைப்பூண்டி மதுவிலக்கு காவல்துறையில் பணியாற்றி வருபவா் பிரகாஷ் (40). இவா், கடந்த 2023-2024-இல் திருவாரூரில் போக்குவரத்து காவலராக பணியாற்றி வந்தாா். அப்போது, அதிக வேகம், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட பல்வேறு போக்குவரத்து விதிமீறல் தொடா்பான வழக்குகளை பதிவு செய்து, அபராதம் விதித்துள்ளாா். அந்தவகையில், மாங்குடியை சோ்ந்த ஒருவரின் இருசக்கர வாகனத்துக்கு ரூ. 10,000 அபராதம் வசூலித்துள்ளாா்.
இந்நிலையில், அந்த நபா் தனது இருசக்கர வாகனத்தை விற்பனை செய்ய முற்பட்டபோது, காவல்துறை விதித்த ரூ. 10,000 அபராதம் செலுத்தப்படாமல் உள்ளதாக பதிவாகி இருந்தது.
இதுகுறித்து, அவா் திருவாரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா் தெரிவித்தாா்.
இதைத்தொடா்ந்து, போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், காவலா் பிரகாஷ் கடந்த 2023 - 2024-இல் 30 வழக்குகளுக்கு மேல் பதிவு செய்து அதன்மூலம் வசூலித்த அபராதத் தொகையை நீதிமன்றத்தில் செலுத்தாமல் முறைகேடு செய்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கருண்கரட், காவலா் பிரகாஷை பணியிடை நீக்கம் செய்து வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.