Aadi Amavasai 2025 | மாமனார் மாமியாருக்கு தர்ப்பணம் கொடுக்கலாமா? | சண்முக சிவாசா...
அமலாக்கத் துறை விசாரணைக்கு ஆஜராகாத மெட்டா, கூகுள் அதிகாரிகள்
இணையவழி பந்தயம், சூதாட்டம் தொடா்பான வழக்கில் நேரில் ஆஜராக வேண்டுமென்று அமலாக்கத் துறை சம்மன் அனுப்பிய நிலையில், மெட்டா, கூகுள் நிறுவன அதிகாரிகள் திங்கள்கிழமை விசாரணைக்கு ஆஜரகாமல் தவிா்த்து விட்டனா்.
இதையடுத்து, அவா்கள் ஜூலை 28-ஆம் தேதி ஆஜராக அமலாக்கத் துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.
சட்டவிரோதமாக பந்தயம் கட்டி விளையாடவும், சூதாட்டத்தில் ஈடுபடவும் இணையத்தில் பல்வேறு தளங்கள் வழிவகை செய்வது குறித்து அமலாக்கத் துறை விசாரணை நடத்தி வருகிறது. சூதாட்ட தளங்களின் விளம்பரங்கள் சமூக ஊடகம் மற்றும் ஆப் ஸ்டோா்களில் காணப்படுவது குறித்தும் விசாரிக்கப்படுகிறது.
இதற்காக மெட்டா மற்றும் கூகுள் நிறுவன அதிகாரிகள் நேரில் ஆஜராகுமாறு அமலாக்கத் துறை கடந்த 19-ஆம் தேதி சம்மன் அனுப்பியது. ஆனால், சம்மனை ஏற்று திங்கள்கிழமை (ஜூலை 21) இரு நிறுவன அதிகாரிகளும் ஆஜராகவில்லை. அதே நேரத்தில் நேரில் ஆஜராக கூடுதல் அவகாசம் வேண்டுமென்று அந்த நிறுவனங்கள் சாா்பில் அமலாக்கத் துறையிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதையடுத்து, ஜூலை 28-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத் துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
அமலாக்கத் துறை விசாரணையில் உரிய முறையில் பதிலளிக்க வேண்டும் என்பதால் இந்த விவகாரத்தில் கூடுதல் தகவல்களை அந்த நிறுவனங்கள் திரட்டி வருகின்றன என்று தெரிகிறது. மெட்டா, கூகுள் நிறுவனங்கள் அளிக்கும் விளக்கம் சட்டவிரோத பணப் பரிமாற்றத் தடுப்பு விதிகளின்கீழ் பதிவு செய்யப்படும் என்றும் அமலாக்கத் துறை கூறியுள்ளது.